ரஃபேல் விவகாரம் தொடர்பான ‘முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன’.. மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 06, 2019 06:58 PM
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையைச் செய்த உச்சநிதிமன்றம் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நிகழ்ந்ததற்கான சந்தேகம் எதுவும் எழவில்லை என தீர்ப்பளித்திருந்தது. இந்த சூழலில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோரின் தரப்பு அளித்த இந்த தீர்ப்புக்கான மறு சீராய்வு மனுவை , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ராணுவ அமைச்சகத்தின் முக்கியமான ஊழியர்களால் ரஃபேல் குறித்த சில ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அவை பொது தளத்தில் இருத்தல் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
அப்போது இடைமறித்த நீதிபதி ரஞ்சன் கோகோய், அந்த ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக மத்திய அரசு என்னவிதமான நடவடிக்கையினை எடுத்தது ? என்கிற கேள்வியை எழுப்பினார். ஆனால் அது பற்றி விசாரித்து வருவதாக அட்டர்னி ஜெனரல் பதில் அளித்துள்ளார். அதே சமயம் ரகசிய ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணைக்கோ மறு சீராய்வுக்கோ கோருவது முறையற்றது என்று அம்மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திப்படி, பிரான்ஸ் தரப்பு இந்த ஒப்பந்தத்துக்கு வங்கி உத்திரவாதம் கொடுக்காததால், இந்தியாவுக்கு அதிக செலவீனங்கள் ஏற்பட்டதாகவும், . 2016-ஆம் ஆண்டு மோடி 36 போர் விமானங்களையும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 விமானங்களையும் வாங்குவதற்கு கையெழுத்திட்டதை ஒப்பிட்டால், காங்கிரஸை விடவும் மோடி வாங்கிய விமானங்களுக்கு ஆன செலவு 1,963 கோடி ரூபாய் அதிகம் என்றும் குறிப்பிட்டு அந்த கட்டுரை வெளியாகியது.
இந்நிலையில் பாதி ஆவணங்கள் வெளியானதாகவும், அதே சமயம் மீதி ஆவணங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ அமைச்சக ஊழியர்களால் திருடப்பட்டதாகவும் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.