'தூங்க போலாம்ன்னு ரெடியான குடும்பம்'... 'சோஃபா அடியில் ஹாயாக படுத்திருந்த 14 அடி ராஜநாகம்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டிலிருந்த சோஃபாக்கு அடியில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு எனும் கிராமத்தில் வசித்து வருபவர் மனீந்திரன். இவரது வீடு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இவர் நேற்றிரவு தூங்கத் தயாரான நிலையில், வீட்டில் உள்ள ஒரு அறையிலிருந்த சோஃபா அடியில் ஏதோ நெளிவதைப் பார்த்துள்ளார். உடனே டார்ச் லைட்டை கொண்டு அடித்துப் பார்த்தபோது, அது பெரிய நீளமுடைய ராஜநாகம் எனத் தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன அவர், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
ராஜநாகம் மிகவும் கொடிய விஷமுடைய பாம்பு என்பதாலும், அதை மிகவும் லாவகமாகப் பிடிக்க வேண்டும் என்பதாலும் வனத்துறையினர் மிகவும் பிரபலமான வாவா சுரேஸை வரவழைத்தார்கள். ராஜநாகம் பாம்புகளை மீட்பதில் வல்லவரான சுரேஷ், அங்கு வந்து சோஃபாவை விலக்கியதும் ராஜநாகம் தலையைத் தூக்கி நின்றது. அதன் நீளம் 14 அடி வரை இருக்கும். பின்னர் பாம்பை லாவகமாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.
இதற்கிடையே வாவா சுரேஷ் பிடித்த 197வது ராஜநாகம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் மட்டுமே காணப்படும் ராஜநாகம் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள்வ ருவது தொடர்கதையாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதே ஆகும். மிகுந்த அரிய வகையைச் சேர்ந்த ராஜநாகம் பாம்புகள் தற்போது அழிந்து வருவது வேதனையான விஷயம் எனச் சூழியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். காடுகளை அழிக்காமல் பாதுகாத்தால் மட்டுமே இதுபோன்ற அரிய உயிரினங்களைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.