“பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணமும் இல்லாம இதை வழங்க வேண்டும்!” - உச்ச நீதிமன்றம் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும், இதனால் கொரோனா பெருந்தொற்றின்போது அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் வாதிடப்பட்டது.
அதனால் இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, பாலியல் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அப்போது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை தொடர்பான வாதங்கள் எழுந்தன. பாலியல் தொழிலாளர்கள் எப்படி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை பெற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து மத்திய அரசு தரப்பில், எந்த வித ஆவணங்களும் இன்றி, பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்கள் குறித்த அனைத்து விபரமும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், மாநில அரசுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கவும், அடையாள விபரங்கள் ஏதும் கேட்காமல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக புதிய அறிக்கையை அடுத்த 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
