ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அப்படி என்ன அவசரம்? அரசியல் உள்நோக்கமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுடெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றுள்ளது.
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் கைது செய்ய என்ன அவசரம். இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்:
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி, உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு் பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார் .
தீவிர விசாரணை:
அந்த முன் ஜாமீன் மனு, கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடியானது. அந்த நாள் முதல் 20 நாட்களாக அவரை காணவில்லை. இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தீவிரமாகத் தேடி வந்தனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் குற்றப்பிரிவு போலீஸார், ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் 1.15 மணிக்கு விருதுநகர் குற்றப்பிரிவு அலுவகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் மதுரை சரக டி.ஐ.ஜி காமினி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு இன்று காலை மருத்துவப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ராஜேந்திர பாலாஜியை அழைத்துச் சென்றனர்.
இத்தனை நாள்களாக எங்கு இருந்தீர்கள்?
பின்னர், அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்:2ல் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ராஜேந்திர பாலாஜியை ஆஜர்படுத்தினர்.. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், இன்று உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால், கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி பரம்வீர் , `இத்தனை நாள்களாக எங்கு இருந்தீர்கள்...?’ எனக் கேள்வி எழுப்பியதுடன், கோரிக்யை ஏற்கவில்லை. அத்துடன் ராஜேந்தி பாலாஜியை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.