'பிணவறையில் அழுகிய உடல்'... 'சுவிட்ச்சை ஆன் செய்ய மறந்த ஊழியர்'... காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 05, 2020 03:31 PM

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த விவசாயியின் உடல் அழுகிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Farmer\'s dead body gets decomposed in the hospital mortuary.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நாகவயல் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன். விவசாயம் செய்து வரும் இவர், நேற்று காலை தனது தோட்டத்தில் விவசாய பணிகளை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், சத்தியசீலன் உடலை பிரேதபரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள பிணவறையில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சத்தியசீலன் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் அழுகி இருப்பதாக சத்யசீலனின் உறவினர்கள் பணியில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சமாதானப்படுத்தி சத்யசீலனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பிணவறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விவரித்த மருத்துவமனை அதிகாரி,  மருத்துவமனையில் உள்ள  உடல் பதப்படுத்தும் இயந்திரம் நன்றாக இயங்கி வருகிறது. அதில் எந்த பழுதும் ஏற்படவில்லை. பணியில் இருந்த ஊழியர் இறந்தவர் உடலை வைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டியை ஆன் செய்யாமல் அறையை பூட்டி விட்டு வந்துள்ளார். அது தான் நடந்த சம்பவத்திற்கு காரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.