'சிறு குழந்தைக்காக 'திரண்ட 'கேரளா'.. 'சல்யூட்' போடவைத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 17, 2019 04:03 PM
பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கேரள மாநிலமே ஒன்று திரண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த,பிறந்து பதினைந்து நாள்களே ஆன குழந்தை ஓன்று ஒன்று அந்த இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.அந்த குழந்தைக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் அதனை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா திருநல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குழந்தையின் பெற்றோர் முடிவு செய்தனர்.
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடக்க முடிவு செய்தனர்.ஆனால் குழந்தையின் உடல்நிலை கருதி அவ்வளவு தூரம் கொண்டு செல்லக்கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இதனையடுத்து குழந்தையின் நிலை குறித்து கேரளாவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் தெரியப்படுத்தபட்டது.அவர்கள் சூழ்நிலையை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிடம் தெரிவிக்க, அவரும் குழந்தைக்கு செய்ய வேண்டிய உதவிகளை துரிதப்படுத்தினார்.அதன்படி கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து கேரள அரசின் இருதயா திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டது
இந்நிலையில் குழந்தை குறித்த விவரங்கள் அனைத்தும் ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்யப்பட்டு மக்களிடம் உதவி கோரப்பட்டது.இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு மங்களூருவில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் குழந்தையுடன் புறப்பட்டது.காவல்துறை மற்றும் குழந்தை நல அமைப்பைச் சேர்ந்த பல தன்னார்வலர்கள் ஆம்புலன்ஸ் வரும் பாதையை அறிந்து சாலையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.சுமார் 400 கிமீ தொலைவிலான தூரத்தை வெறும் ஐந்து மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கடந்து மாலை 4 மணிக்கு கொச்சி வந்தடைந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக குழந்தையின் நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நேரம் விலைமதிப்பற்றது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே குறித்த நேரத்தில் பாதுகாப்பாகவும்,அதி விரைவாகவும் ஆம்புலன்ஸை ஓட்டிவந்த ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.