"இவங்க 2 பேருக்குமே தங்கப்பதக்கம் கொடுக்கணும்".. பாகிஸ்தான் வீரரின் பதிவில் நீரஜ் சோப்ரா போட்ட கமெண்ட்.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. இதனை இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
முதல் தங்கம்
இங்கிலாந்தின் பெர்மிங்காமில் நடைபெற்றுவந்த ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 91.8 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி புதிய சாதனையையும் அர்ஷத் நிகழ்த்தியிருக்கிறார். காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எரிதலில் பாகிஸ்தான் பெறும் முதல் தங்கம் இதுவாகும். இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள அர்ஷத்,"கடவுளின் அருளாலும், உங்கள் பிரார்த்தனையாலும் நான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று 91.18 மீ என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வாழ்த்து
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, அர்ஷத்தின் பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில்,"தங்கம் வென்ற அர்ஷத் பாய்க்கு வாழ்த்துக்கள். மேலும், 90 மீட்டர் என்ற சாதனையை படைத்ததற்கும் எதிர்கால போட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்" என கமெண்ட் செய்திருந்தார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருக்குமே தங்க பதக்கம்
இந்நிலையில், அர்ஷத் நதீம் மற்றும் நீரஜ் சோப்ராவை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். நீரஜ் சோப்ராவின் வாழ்த்து பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட்டை பகிர்ந்து,"உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும். போட்டித்தன்மைக்கும் பகைமைக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தியதற்காக இருவருக்கும் தங்கப் பதக்கம் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த பதிவு பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
This is how the world should be… A Gold medal to both of them for demonstrating the difference between competitiveness and enmity. #NeerajChopra #ArshadNadeem pic.twitter.com/F47TeCtJGN
— anand mahindra (@anandmahindra) August 8, 2022