"இந்த போட்டோ நமக்கு கத்துக்கொடுக்குறது ஒண்ணுதான்".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த நாசாவின் புகைப்படம்..வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டிருக்கிறது. அதனை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
கியூரியாசிட்டி விண்கலம்
மனிதகுலம் அறிவியல் துறையில் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தி இருந்தாலும், விண்வெளி குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் நம்மால் பதிலளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே பல மில்லியன் டாலர் செலவில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன உலக நாடுகள். நாள்தோறும் விண்வெளி பற்றிய புதிய புதிய தகவல்கள் நமக்கு கிடைப்பது இந்த ஆராய்ச்சிகளின் பலனாகத்தான். அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. இந்த விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தின் புவியியல் அமைப்பு, தட்பவெட்பம் ஆகியவை குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்துவருகிறது. இதுகுறித்த புகைப்படங்களை நாசா தனது சமூக வலைதல பக்கங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
If there’s just one thing this photo should teach us….it’s humility.. https://t.co/S2WN9thBBd
— anand mahindra (@anandmahindra) July 21, 2022
பணிவு
இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் ஆனந்த் மஹிந்திரா, "இந்த புகைப்படம் நமக்கு கற்றுத்தரக்கூடிய ஒன்று இருந்தால் அது பணிவு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.