'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 31, 2020 11:25 PM

இந்தியாவில் வருடாவருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ முன்னதாக அறிவித்து இருந்தது. தொடர்ந்து கொரோனாவால் ஏப்ரல் 15-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ தொடரை தள்ளி வைத்தது. தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருவதால், இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

IPL 2020: No Play means no Pay for Players, says ICA Chief

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இப்படி நிலைமை ஏற்படும் பட்சத்தில் உள்ளூர் வீரர்களுக்கும் கூட சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் எக்கச்சக்க கனவுகளுடன் ஐபிஎல் தொடரில் ஆடவிருந்த அறிமுக வீரர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் விதிமுறைப்படி போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன் 15% சம்பளம் வீரர்களுக்கு வழங்கப்படும். பின்னர் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது 65% சம்பளம் வழங்கப்படும். தொடர்ந்து ஐபிஎல் தொடர் முடிந்த  பின்பு மீதமுள்ள சம்பளம் வீரர்களுக்கு அளிக்கப்படும். ஆனால் இந்தமுறை எந்தவொரு வீரருக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை. கொரோனாவால் ஐபிஎல் தள்ளிப்போனதே இதற்கு காரணம்.

ஐபிஎல்லை பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் நட்சத்திர வீரர்களுக்கு ரூபாய் 75 கோடி முதல் 85 கோடி ரூபாய் வரையில் சம்பளமாக கொடுக்க வேண்டும். போட்டி நடக்காமல் போனாலோ அல்லது குறுகிய காலம் நடத்தப்பட்டாலோ இந்தளவு சம்பளம் கொடுக்க முடியாது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒருவேளை போட்டிகள் குறுகிய காலத்தில் நடத்தப்பட்டால் வீரர்களின் சம்பளத்தை குறைத்து அளிக்கும் முடிவை ஐபிஎல் அணிகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.