‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 04, 2020 01:16 PM

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Congress will pay migrants train fare, says Sonia Gandhi

இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும். அவர்களுக்காக ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்கிறோம். நமது தொழிலாளர்கள் நம் நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றிற்காக கிட்டத்தட்ட ரூ.100 கோடியை அரசு செலவு செய்கிறது. குஜராத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக, ரயில்வே அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்கிறது. அப்படியானால் நமது நாட்டின் தொழிலாளர்களுக்கு குறிப்பாக இலவச ரயில் பயணத்தை இந்த கடுமையான நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது?

ஊரடங்கு குறித்து மத்திய அரசு முன் அறிவிப்பு கொடுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்றும் கூட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்புகின்றனர். ஆனால் பணம் அல்லது இலவச போக்குவரத்து இல்லை.

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. காங்கிரஸின் தொடர்ச்சியான கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணிக்க மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எனவே, இந்திய தேசிய காங்கிரஸ், ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை கட்சி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்கப்படும் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.