"ஒரு ஸ்கூலு, ஒரு பையன், ஒரு டீச்சர்".. 12 கி.மீ சென்று க்ளாஸ் எடுக்கும் வாத்தி.. நெகிழ்ச்சி பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 150 பேர் வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அங்கே அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது.
இந்த பள்ளியில், 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரை அங்கே உள்ள சூழலில், ஒரு மாணவர் மட்டும் தான் படித்து.வருகிறார்.
நான்கு வகுப்புகள் இருந்த போதும் ஒரே ஒரு மாணவர் மட்டும் பள்ளிக்கு வருவது சற்று அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும் அதே வேளையில் இதை சுற்றி நடைபெறும் சில சம்பவங்கள் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
கார்த்திக் ஷெகோக்கர் என்ற மாணவன் அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மட்டும் தினமும் பள்ளிக்கு வரும் சூழலில் அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் ஒருவர் தினமும் சுமார் 12 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கார்த்திக் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் தினந்தோறும் காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் பாடிவிட்டு பின்னர் வகுப்புகள் நடத்துவதை பின்பற்றி வருகின்றனர்.
இது பற்றி பேசும் ஆசிரியர் கிஷோர் மங்கார், இரண்டு ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருவதாகவும் பள்ளியில் தான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து பாடங்களையும் மாணவர் கார்த்திக்கிற்கு தனி ஆளாக தான் கற்றுக் கொடுத்து வருவதாகவும் அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் ஆசிரியர் கிஷோர்.
ஒரே ஒரு மாணவன் மட்டுமே பள்ளிக்கு வந்த போதிலும் தினந்தோறும் பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து அந்த மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல் இருக்க, வருகை தரும் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் மறுபக்கம் ஒரு மாணவனுக்காக இயங்கி வரும் பள்ளி நிர்வாகம் குறித்த செய்தியும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.