'போட்டாரு பாருயா ஆர்டர்'... 'மகாராஷ்டிர அரசின் அதிரடி அறிவிப்பு'... பாராட்டிய தள்ளிய தமிழக நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய உத்தரவு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்குத் தமிழக நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மகாராஷ்டிர அரசின் சார்பில் அனைத்து துறைத் தலைவர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பணியில் இருக்கும்போது வேண்டுமென்றே மராத்தி மொழியைப் பயன்படுத்தாத ஊழியர்களுக்கு ஆண்டு வருமான உயர்வு கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விரிவாக அந்த சுற்றறிக்கையில் அனுப்பப்பட்டுள்ள தகவலில், ''பல துறைகள் இன்னும் ஆங்கில மொழியில் சுற்றறிக்கை, அரசாங்க தீர்மானங்கள் போன்றவற்றை வெளியிடுகின்றன. அதேபோன்று பல துறைகளின் வலைத்தளங்களும் ஆங்கிலத்தில் உள்ளது. இதேபோல், பல நகராட்சி நிறுவனங்கள், அறிவிப்புகள், கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் மாதிரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்குவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மராத்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். அதோடு முக்கியமாக பணியில் இருக்கும் ஊழியர்கள் வேண்டுமென்றே மராத்தி மொழியைப் பயன்படுத்தாமல் இருந்தால் ஊழியர்களுக்கு ஆண்டு வருமான உயர்வு கிடையாது, என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிப்ரவரியில் நடந்த மாநில பட்ஜெட் கூட்டத்தில் , பள்ளிகளில் மராத்தி மொழியைக் கட்டாய பாடமாக மாற்றும் சட்டத்தை மாநில அரசாங்கம் நிறைவேற்றியது. மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கு 2020 - 2021 ஆம் கல்வியாண்டிலிருந்து மராத்திய மொழி கட்டாய பாடமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனிடையே மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்புக்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள். தாய் மொழி என்பது ஒரு அடையாளம் அது நிச்சயம் காக்கப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
