மண்டை மேல இருந்த கொண்டைய மறந்த திருடன்.. வழக்கை முடிச்சுவச்ச ஒரேயொரு போட்டோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரேயொரு புகைப்படம் மூலமாக செல்போன் திருடனை கைது செய்திருக்கிறது மத்திய பிரதேச காவல்துறை.
புகார்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் இந்தூரில் அமைந்துள்ள பங்கங்கா பகுதியில் தனது செல்போன் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து, சஞ்சய்யின் தொலைந்துபோன மொபைல் போனை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது காவல்துறை. அதன்படி, அவரது போன் டிராக் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே சஞ்சய் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு சொல்லிய விஷயம் அதிகாரிகளை வியப்படைய செய்திருக்கிறது.
ஒரே ஒரு போட்டோ
தொலைந்துபோன போனில் சஞ்சய் பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த போனை திருடிய நபர், ஒரு பெண்ணின் புகைப்படத்தை சஞ்சய்யின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலமாக பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த சஞ்சய் உடனடியாக காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். இதனிடையே செல்போன் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.
டிராக் செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், சஞ்சய்யின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி விசாரணையில் ஈடுப்பட்டனர். அவரது வீடு இருக்கும் இடத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் செல்போனை திருடிய ஜாபர் என்பவரை கைது செய்திருக்கின்றனர்.
விசாரணை
திருடப்பட்ட போனில் இருந்து தனது அம்மாவை போட்டோ எடுத்து அதனை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததாக ஜாபர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜாபரின் வீட்டை பரிசோதனை செய்த போலீசார் அங்கிருந்து மேலும் இரண்டு செல்போன்கள் கைப்பற்றியுள்ளனர். அவையும் திருடப்பட்டவையா என்ற கோணத்தில் ஜாபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனை திருடி, அதில் தனது அம்மாவை புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததால் திருடன் சிக்கிய சம்பவம் இந்தூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.