இப்படி ஒரு எச்சரிக்கையா.. போலீசாரின் நூதன முயற்சி.. இனி போதையில வண்டி ஓட்டவே யோசிப்பாங்க.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுலு மணாலியில் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது மட்டும் அல்லாமல் காவல்துறையினரின் இந்த நூதன முயற்சியையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
குலு மணாலி
இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது குலு மாவட்டம். இங்குதான் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலி அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த பகுதி மிகவும் குளிர் நிரம்பியது. இதனாலேயே பல லட்ச கணக்கானோர் இந்த பகுதிகளுக்கு செல்ல விருப்பப்படுகின்றனர். இங்கு சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். இங்கு சுற்றுலாவே முக்கியமான தொழிலாக இருக்கிறது. வெளி மாநிலங்களை சேர்ந்த அதிக பயணிகள் வருவதாலேயே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அதிக சிரத்தை எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன. இதனை தவிர்க்க ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதே வேளையில் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையும் புதுப்புது முறைகளில் மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குலு மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் நிறுவியுள்ள எச்சரிக்கை பலகை ஒன்று பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
குளிர்
மலைகள் நிரம்பிய குலு மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கை பலகையில்," மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். மணாலியில் உள்ள சிறைகளில் கடுங்குளிர் நிலவும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பலகையின் கீழ்ப்புறத்தில் "சிகரெட் புகைத்தல் நுரையீரலை சுடும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த பலகையை வீடியோவாக எடுத்து அஜ்னாஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கின்றனர். மேலும், போக்குவரத்து காவல்துறையினரின் இந்த முயற்சியையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.