சைடிஷ் வாங்குவதில் வந்த தகராறு.. நண்பர்களின் செயலால் நடுங்கிப்போன மக்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூரில் சைடிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அவரது நண்பர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை பகுதியை சேர்ந்தவர் வேலு. 33 வயதான இவர் மீது ஏற்கனவே வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது சொந்த ஊர் சென்னை வில்லிவாக்கம் ராஜாமங்கலம் ஆகும். அங்கே தனது நண்பர்களுடன் சேர்ந்து இவர் கொலை செய்துவிட்டு பிணையில் வெளிவந்து தற்போது தனது தாயாருடன் தொட்டிக்கலையில் வசித்துவருவதாக சொல்லப்படுகிறது.
சைடிஷ்
இந்நிலையில், வேலு தனது நண்பர்களான செல்வா (26), கோகுல் (24) , ஸ்டாலின் (26) ஆகியோருடன் சேர்ந்து வெளியே சென்றிருக்கிறார். அப்போது செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிக்கலை கிரிக்கெட் மைதானம் அருகில் இருக்கும் மரத்தடியில் இவர்கள் அனைவரும் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது, வேலுவை சைடிஷ் வாங்கித் தருமாறு நண்பர்கள் கூறியுள்ளனர். இதற்கு வேலு மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து, நண்பர்கள் மூன்று பேரும் வேலுவை திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே வேலுவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒருகட்டத்தில், இது கைகலப்பாக மாறவே நண்பர்கள் சேர்ந்து வேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே மயங்கிவிழுந்த வேலு சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனையடுத்து இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் உயிரிழந்த வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே இருக்கும் வழக்குகள்
இதனிடையே இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் வேலுவின் நண்பரான வெள்ளாக்குளம் பகுதியைச் செல்வா என்பவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரையும் பிடிக்க காவல்துறை தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், இது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக வேறு யாரேனும் இவர்களை தூண்டிவிட்டு இப்படி செய்ய சொன்னார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூரில் சைடிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
