"பூஜை போட்டாகணும்..அப்பதான் சரியாகும்".. உடம்பு சரியில்லன்னு அருள்வாக்கு கேக்கப்போன நபர்.. கொஞ்ச நாளில் வந்த மிகப்பெரிய சிக்கல் .!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள் வாக்கு சொல்வதாக கூறி 70 பவுன் நகைகளை மோசடி செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். இது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அருள்வாக்கு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பால முருகன். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தின் நடுவே அமைந்துள்ள பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பால முருகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதனை அடுத்து தனது வீட்டிற்கு அருகில் உள்ள முப்பிலி மாடன் சாமி கோவிலில் அருள் வாக்கு சொல்லும் பழனி குமார் என்பவரிடம் திருநீறு வாங்கியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகும் உடல் நிலையில் பாதிப்பு தொடரவே மீண்டும் பழனி குமாரிடம் சென்று திருநீறு கேட்டுள்ளார் பால முருகன். அப்போதுதான் பூஜை குறித்த விபரங்களை பழனிக் குமார், பால முருகனிடம் தெரிவித்திருக்கிறார்.
பூஜை
உடல் நலன் மற்றும் தொழில் விருத்தி, குடும்ப நலன் ஆகியவற்றிற்காக பூஜை நடத்த வேண்டும் எனவும் அதற்கு வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்க வேண்டும் எனவும் பால முருகனிடம் பழனி குமார் கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய பால முருகனின் மனைவி தங்கமாயாள் தன்னிடம் இருந்த 26 சவரன் நகைகளை கொடுத்திருக்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து புது சிக்கல் முளைத்திருக்கிறது. பூஜையில் வைப்பதற்காக கேட்ட நகைகளை பழனிக் குமார் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் திருப்பித் தராததால் சந்தேகம் அடைந்த பால முருகன் இது பற்றி வெளியே சொல்லி இருக்கிறார். அப்போது அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரிடம் சுமார் 70 சவரன் நகைகளுக்கு மேல் பழனிக் குமார் இதுபோன்று வாங்கியிருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பால முருகன் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகார்
இதனையடுத்து டிஎஸ்பி சபரிநாதனின் உத்தரவுப்படி நகர் குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் பழனிக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், பழனிக் குமாரின் மனைவி ரம்யா தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தொடர்ந்து தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்வாக்கு கூறுவதாக, 70 சவரன் நகைகளுக்கு மேல் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.