‘என் பேரை பாஜக வேட்பாளாரா அறிவிச்சது எனக்கே தெரியாது’!.. போட்டியிட முடியாது என நிராகரித்த MBA பட்டதாரி.. கேரளாவில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பாஜக சார்பில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டவர், அதை உடனே நிராகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அவற்றில் 85 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன், கோணி மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். நடிகர் கிருஷ்ணகுமார் திருவனந்தபுரத்திலும், நடிகர் சுரேஷ்கோபி திருச்சூரிலும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் பாஜக-வில் இணைந்த மெட்ரோமேன் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் வயநாடு மாவட்டம், மானந்தவாடி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிகண்டன் என்கிற மணிக்குட்டன் என்பவர், தனக்கு தெரியாமலேயே பாஜக தன்னை வேட்பாளராக அறிவித்துவிட்டதாகவும், ஒரு அரசியல் கட்சி சார்பில் போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
MBA பட்டதாரியான மணிகண்டன் (31) இதுகுறித்து கூறுகையில், ‘ஒரு அரசியல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. பாஜக என்னை வேட்பாளராக அறிவித்ததே எனக்கு தெரியாது. டிவி-யில் பார்த்துதான் என்னை வேட்பாளராக அறிவித்ததை தெரிந்துகொண்டேன்.
மணிக்குட்டன் என்ற எனது பேஸ்புக் பக்கத்தின் பெயர், வேட்பாளர் பட்டியலில் வந்தது. அதன் பிறகு பாஜக நிர்வாகிகள் எனக்குத் தொடர்ந்து போன் செய்த பிறகுதான் முழு விவரமும் தெரியவந்தது. வயநாடு மாவட்டத்தில் அதிகமாக வசிக்கும் “பணிய” சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது பெயரை பாஜக அறிவித்தது எனக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனது படிப்புக்கு ஏற்ற வேலை செய்து, குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன். நான் பாஜக ஆதரவாளன் கிடையாது. அதனால்தான் பாஜக வேட்பாளராக அறிவித்ததை நிராகரித்தேன்’ என மணிகண்டன் தெரிவித்துள்ளார். பணிய சமூகத்தின் முதல் MBA பட்டதாரி மணிகண்டன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மானந்தவாடி தொகுதியில் பி.கே.ஜானு என்ற வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சித் தலைமை திடீரென மணிகண்டனை வேட்பாளராக அறிவித்தது. அதேபோல் பாஜக வென்ற ஒரே தொகுதியான நேமம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஓ.ராஜகோபாலுக்கு சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிட விருப்பமே தெரிவிக்காத ஒருவரை பாஜக வேட்பாளராக நியமித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.