"இறந்த உடலை தோண்டி எடுத்ததுக்கு அப்புறம்.." மழை வர வைக்க வினோத சடங்கு.. பரபரப்பை உண்டு பண்ணும் கிராம மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு ஊரில், அதிக நாட்கள் மழை வரவில்லை என்றாலோ அல்லது ஏதாவது தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருந்தாலோ, அதற்காக ஏதேனும் பழங்கால சடங்குகளை செய்யும் பழக்கம், பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
Also Read | "பூமியில் தென்பட்ட பால் கடல்.." முதல் முறையாக கிடைத்த அரிய புகைப்படம்.. வியப்பில் மக்கள்!!
இந்தியாவில், கழுதை அல்லது தவளை போன்றவற்றிற்கு திருமணம் செய்தால், அந்த ஊரில் வறட்சி மாறி மழை பெய்யும் என்பதை பல இடங்களில் பின்பற்றுவதை பற்றி கேட்டிருப்போம்.
ஆனால், கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் அமைந்துள்ள களகேறி என்னும் கிராமத்தில், மழை பெய்வதற்காக மக்கள் செய்து வரும் செயல்,பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் அந்த மாநிலத்தில் உள்ள களகேறி கிராமத்தில், ஒரு சொட்டு மழை கூட பெய்யாமல் இருப்பது அங்குள்ள விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் மீதுள்ள சாபம் குறித்து விவாதிக்கவும் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியை சுற்றி, இறந்தவர்கள் உடல்களை தோண்டி எடுத்து, அதற்கு தண்ணீர் ஊற்றினால் மழை பெய்யும் என முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இறந்தவர்களின் பட்டியலை உருவாக்கிக் கொண்டு, உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கும் சென்றுள்ளனர். தொடர்ந்து, இறந்தவர்களின் உறவினர்கள் உதவியுடன், அந்த உடலின் தலைப்பாகம் இருக்கும் இடத்தை அறிந்து, அதனருகே இரண்டு அடிக்கு குழி தோண்டிய ஊர் மக்கள், பைப் ஒன்றை பயன்படுத்தி, அதற்குள் தண்ணீரை ஊற்றியுள்ளனர்.
மொத்தம் 25 உடல்களைத் தோண்டி எடுத்து, இப்படி அந்த கிராம மக்கள் தண்ணீர் ஊற்றியுள்ள நிலையில், கடைசி உடலுக்கு தண்ணீர் ஊற்றிய கொஞ்ச நேரத்திலேயே, அங்கு மழை தூறல் போட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், அவர்களின் சடங்குகள் மீது நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதானவர் உயிரிழந்த போது, வாயை திறந்த படி இருந்ததாகவும்,உடலை அடக்கம் செய்யும் போது கூட யாரும் வாயை மூடவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், கிராமம் முழுவதும் கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த முதியவர் தாகத்துடன் புதைக்கப்பட்டதால் தான், இப்படி நடந்ததாக ஜோசியர் ஒருவர் கூறி, அந்த உடலை தோண்டி தண்ணீர் கொடுத்தால் தான் சரி ஆகும் என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
அதே போல, அவர்கள் செய்ததும், பஞ்சமும் வறட்சியும் மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதிலிருந்து, அவர்களின் கிராமத்தில் எப்போதெல்லாம் இது போன்ற பஞ்சமும் வறட்சியும் வருகிறதோ, அப்போது இதை போல் சமீபத்தில் இறந்த உடலைத் தோண்டி, தண்ணீர் கொடுப்பதை ஒரு சடங்காக கொண்டுள்ளனர். இது தொடர்பான செய்திகள், படிக்கும் பலரையும் வியப்பிலும், அதே வேளையில் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.