மெஹந்தி விழாவில் நடனமாடிய போது நெஞ்சை பிடிச்சிட்டு உக்காந்த நபர்.. திருமண வீட்டில் ஏற்பட்ட சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் நண்பர் வீட்டு மெகந்தி விழாவில் நடனமாடியவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக வாழ்வியல் முறைகளிலும் வெவ்வேறு விதமான பழக்கவழங்களை கடைபிடித்துவருகின்றனர். திருமணங்களை பொறுத்தவரையில் இந்தியா முழுமையும் பலவிதமான பாரம்பரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் மெஹந்தி போடும் நிகழ்வு திருமணங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மணமகளுக்கு மெஹந்தி போட்டு, விருந்து, இசை மற்றும் நடனம் என இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் மக்கள்.
இந்நிலையில், கர்நாடகாவில் தனது நண்பர் வீட்டு மெஹந்தி விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த நபர், நடனம் ஆடுகையில் பரிதாபமாக மேடையிலேயே உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.
மெஹந்தி விழா
கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் அம்பாகிலு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி ஆச்சார்யா. 56 வயதான இவர் அங்குள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருடைய நண்பர் ஒருவர் தனது வீட்டில் நடைபெற இருக்கும் மெஹந்தி விழாவிற்கு இவரை அழைத்திருக்கிறார். இதனையடுத்து, அதே பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற விழாவிற்கு சென்றிருக்கிறார் கணபதி.
விழாவில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட கணபதி, பின்னர் அங்கிருந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, விழாவிற்கு வந்தவர்கள் நடனமாட துவங்கவே, கணபதியும் சென்று அவர்களுடன் நடனமாடியிருக்கிறார்.
அதிர்ச்சி
நடனமாடிக்கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்படவே மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கி பிடித்திருக்கின்றனர். இதனால் கல்யாண வீடே அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணபதியை கூட்டிச் சென்றிருக்கிறார்கள் உறவினர்கள். இந்நிலையில், கணபதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், கல்யாண வீட்டுக்கு வந்திருந்த அனைவரும் சோகமடைந்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் நண்பர் வீட்டு மெஹந்தி விழாவில் கலந்துகொண்டு நடனமாடிய நபர், உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.