KAMAL HAASAN : தமிழர்களின் உணர்வு எப்படியானது? ராகுலின் கேள்விக்கு.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகராகவும், பல ஆண்டுகால சமூக ஆர்வலராகவும், மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் மூலம் அரசியல் பிரபலமாகவும் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியுடனான ஒன் டூ ஒன் நேர்காணல் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
முன்னதாக காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு பேசியிருந்த நடிகர் கமல்ஹாசன், “ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொன்னார். இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அதற்காக மட்டும் அவரை என் சகோதரனாக நினைக்கவில்லை. இது இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் கலந்துகொள்ளும் யாத்திரை. அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் கமல்ஹாசன் இருவரும் பேசுவதாக தற்போது வெளியாகியுள்ள புதிய நேர்காணல் கலந்துரையாடலில், மொழி, கலாச்சாரம், விவசாயம், சீனா உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து விவாதித்து பேசியுள்ளனர். இதனை ராகுல் காந்தி தமது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய ராகுல் காந்தி, “தமிழகம் செல்லும்போது தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள முயல்வேன். உண்மையில் தமிழர்களின் ஐடியாலஜி என்ன? தமிழர்களின் உணர்வு எப்படியானது?” என கேட்டார். இதற்கு பதில் அளித்திருந்த கமல், “மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரது உணர்வு போன்றேதான், தமிழரது உணர்வும்.. தமிழர்களுக்கும் அதே உணர்வு உள்ளது. தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும் தான். நம் அனைவருக்குமே உண்டான பெருமை அது.
ஆனால், தமிழ்நாட்டினர் தனித்தீவினராகவும், குறுகிய மனப்பான்மை மற்றும் மொழி வெறி பிடித்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், ஏதேனும் ஒரு தமிழக கிராமத்ததிற்கோ நகரத்துக்கோ போய் நேரு அல்லது சந்திர போஸ் என அழைத்தால், நிச்சயம் ஒரு கறுப்பு மனிதர் திரும்பிப் பார்ப்பார். அவர்களுக்கும், நேருவுக்கும் போஸுக்கும் உருவ ஒற்றுமை இராது. ஆனால் பல காந்திகளை அங்கு காணலாம். அதுவே தமிழக மக்களின் உணர்வு. மத்திய அரசு தங்களை புறக்கணிப்பதாக ஏதோ ஒரு கட்டத்தில் தமிழர்கள் உணர்ந்தார்கள். இன்றும் நடப்பதுதான். ஆனால் நிரந்தரம் அல்ல. நீங்கள் இப்போது செய்வதை போலவே இதை அணுக வேண்டும்.” என விளக்கினார்.