BHARAT JODO YATRA : “அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் தெருவில் வந்து நிற்பேன்.” - ராகுல் காந்தி யாத்திரையில் கமல் பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராகுல் காந்தி மற்றும் நடிகர் கமல்ஹாசன் பங்குபெற்ற யாத்திரையில் கமல்ஹாசன் பேசியுள்ள விஷயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், “ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொன்னார். இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அதற்காக மட்டும் அவரை என் சகோதரனாக நினைக்கவில்லை. இது இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் கலந்துகொள்ளும் யாத்திரை. அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் நான் தெருவில் வந்து நிற்பேன். நான் அதற்காகவே இந்த யாத்திரையில் பங்கு கொண்டுள்ளேன்.
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்பது எனது அரசியல் பயணத்தில் பாதிப்பை ஏற்படும் என்று பலர் கூறினார்கள். ஆனால் எனது மனசாட்சியை கேட்டு யாத்திரையில் பங்கேற்பது என முடிவு செய்தேன். நான் ஏன் இங்கு வந்தேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்ததோடு, தனியாக அரசியல் கட்சியையும் தொடங்கினேன். ஆனால் நாடு என்று வரும்போது, அனைத்து அரசியல் கட்சிக் கோடுகளும் மங்கலாக வேண்டும். நான் அந்த வரியை மங்கலாக்கி இங்கே வந்தேன்.
எனது அரசியல் பயணம் எனக்காக உருவானது இல்லை. நாட்டுக்காக உருவானது. நாடு என்று வரும்போது இங்குள்ள பல்வேறு கட்சிகளின் கட்சி கொடிகளின் நிறங்கள் தாண்டி, நமக்கு தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களே தெரிய வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இந்த யாத்திரை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் இது பல தூரம் செல்ல வேண்டி உள்ளது.
நான் கிலோ மீட்டர் கணக்கை பற்றி பேசவில்லை. மாறாக இந்த நடை பயணம் நமது பாரம்பரியமிக்க வரலாற்றிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது ஒன்றும் ஐந்தாண்டு திட்டமல்ல. இது அதையும் தாண்டி அடுத்து வர இருக்கும் தலைமுறைகளுக்கானது. ராகுல் காந்தியை நான் மிகவும் மதிக்கிறேன். அவரின் துணிச்சலான இந்த முடிவையும், மாநிலங்கள் தாண்டிய இந்த நடை பயணத்தையும் நான் ஆதரிக்கிறேன். அதற்கு வாழ்த்து கூறுகிறேன்” என பேசியுள்ளார்.