'அபிநந்தன் ரஃபேலில்' சென்றிருந்தால் நடந்திருப்பதே வேறு... பாகிஸ்தானை கதறவிட்டிருப்பார் - பி.எஸ். தனோவா

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 05, 2020 11:40 AM

இந்திய விமானப்படைக்கு உரிய நேரத்தில் ரஃபேல் போர் விமானம் கிடைத்திருந்தால் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்திருப்பார் என முன்னாள் விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

If Abhinandan went to Rafael, Pakistan would not be trapped-P.S.dhanoa

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் இருநாடுகள் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற  பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் MiG21 Bison ரக போர் விமானத்தில் துரத்திச் சென்று தாக்கினார். பாகிஸ்தானின் லாம்வாலி பகுதியில் பாகிஸ்தானின் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அதேநேரம் அபிநந்தன் சென்ற மிக் 21 விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டு, பாகிஸ்தான் ராணுவம் வசம் அபிநந்தன் சிக்கினார். இதையடுத்து இருநாடுகளின் பேச்சுவார்த்தை மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள, முன்னாள் விமானப்படைத் தளபதி தனோவா, 10 வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவுக்கு வலிமை மிகுந்த 'ரஃபேல்' போர் விமானங்கள் கிடைத்திருந்தால் நமது ராணுவத்தின் வலிமை மேம்பட்டிருக்கும் எனக் குறிப்பட்டார். அபிநந்தன் மட்டும் ரஃபேல் விமானத்தில் பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்றிருந்தால் நடந்திருப்பதே வேறு என்றும் அவர் தெரிவித்தார்.

பறக்கும் சவப்பெட்டி என அழைக்கப்படும் ஆபத்தான, பழைய மிக்-21 விமானங்களை போருக்கு அனுப்பியதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ராணுவத்துக்கான கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கி சென்று விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags : #ABHINANDAN #DHANOA #RAFAEL WAR PLANE #MIG 21 BISON