'என் மகனை நெனைச்சு பெரும படுறேன்'...அவன் உண்மையான ராணுவ வீரன்...தந்தை பெருமிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Feb 28, 2019 04:39 PM
இக்கட்டான சூழ்நிலையிலும் தான் ஒரு உண்மையான ராணுவ வீரன் என்பதை நிரூபித்து விட்டான்,அவனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என,அபிநந்தனின் தந்தை வர்த்தமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தன.இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ,2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி புகுந்தன.அதனை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது.அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.
இந்த தகவலை அறிந்த அபிநந்தனின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது.அரசியல் கட்சி தலைவர்கள்,ராணுவ அதிகாரிகள் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் உட்பட பலரும் அபிநந்தனின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.அவரை மீட்பதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அபிநந்தனின் தந்தையும், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியுமான ஏர் மார்ஷல் வர்த்தமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. நண்பர்களின் அன்புக்கும், கவலையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
அபிநந்தன் காயமடையவில்லை, உயிருடன் இருக்கிறார், திறன் மிகுந்த மனதுடனும், தையரித்துடனும் பேசுகிறார். அவர் சிறந்த வீரர் என்பதை நிரூபித்து விட்டார். அவரை எண்ணி பெருமை கொள்கிறேன். அனைவரின் பிராத்தனையுடன் அவர் பத்திரமாக திரும்புவார் என நம்புகிறேன். அவர் எந்த கொடுமைக்கும் ஆளாகாமல் நாடு திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன். இந்த தருணத்தில் எங்களுக்கு ஆறுதல் கூறி ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
