போர் விமானத்தை இயக்கும் அபிநந்தன்.. மீண்டும் எப்போது பறப்பார்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 20, 2019 04:24 PM

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் கூடிய விரைவில் மீண்டும், போர் விமானத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

wing commander abhinandan may soon fly fighter jet again

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர். பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது.

அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ  சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவரிடம் விமானப் படை சார்பில் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அபிநந்தனிற்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அபிநந்தன் கூடிய விரைவில் மீண்டும் விமானத்தை இயக்குவார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விமானப்படை அதிகாரி ஒருவர், 'இந்த மாதிரி சமயங்களில் விமானப்படைவீரரின் ஆரோக்கியத்தை குறைந்தது 12 வாராங்களாவது பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகு தான் அந்த வீரர் மீண்டும் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்படுவார். அந்தவகையில் அபிநந்தனனின் முழு உடற்தகுதி மே மாதம் இறுதியிலேயே தெரியவரும். ஆனால் அவரின் தற்போதைய உடல்நிலையை  வைத்து பார்க்கும்போது அவர் விரைவில் மீண்டும் பறப்பார் என்றே நான் கருதுகிறேன்' எனத் தெரிவித்தார்.

இதனிடையே அபிநந்தன் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த வாரம் உடற்தகுதி பரிசோதனை மேற்கொண்டார். அதன்பின்னர் தற்போது அபிநந்தன் மீண்டும் ஸ்ரீநகரிலுள்ள விமானப்படையின் 51 -வது ஸ்குவாட்ரான் பிரிவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ABHINANDAN #JET #WINGCOMMANDER #PULWAMA