‘2021-ல் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா?’... ‘தமிழக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஒரு சில கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கல்வி ஆண்டில், பள்ளிகளுக்கு பூஜ்ஜியம் கல்வி ஆண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஏற்கனவே கொரோனா நோய் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 11-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் வரும் 2021-ம் ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் நடப்பு ஆண்டில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். முதல்வருடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை விரைவில் வெளியிடுவோம்.
பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இந்த கல்வி ஆண்டை அறிவிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறந்து விட்டு பிறகு உடனடியாக மூடியுள்ளனர். கொரோனா நோய் பரவல் காரணமாக அவ்வாறு மூடப்பட்டுள்ளது. எனவேதான், பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் நாங்கள் அவசரப்படவில்லை. இவ்வாறு செங்கோட்டையன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
