‘கொரோனா பாதிப்பால் எடுக்கப்பட்ட முடிவு’... ‘மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி’... வெளிவந்த தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 முதல் 21 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்க, கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
ஆனால் திடீரென பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏரளாமான நிதி தேவைப்படுவதால் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எம்பிக்களின் ஊதியம் குறைப்பு, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
அந்த வரிசையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளபடி, 17 சதவீதம் என்ற அளவிலேயே அகவிலைப்படி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரையிலான 3 மாத அரியர் தொகையும் கிடைக்காது.
இந்த நடவடிக்கையானது, 2020-2021 மற்றும் 2021-2022 நிதியாண்டுகளில் ரூ.37,350 கோடியை மிச்சப்படுத்த உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்ற நடவடிக்கையை மாநிலங்கள் பின்பற்றினால் மாநிலங்களுக்கு ரூ.82,566 கோடியை மிச்சப்படுத்தும். இதன்மூலம் ஒருங்கிணைந்த சேமிப்பு ரூ.1.20 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
