சாப்பிட சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்.. 10வது படித்த 'கூலி தொழிலாளர்' தந்தையின் அசாத்திய கண்டுபிடிப்பு.!! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாமாற்றுத் திறனாளி மகளுக்காக தினசரி கூலி தொழிலாளி ஒருவர் செய்த விஷயம், தற்போது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
தெற்கு கோவாவின் போண்டா தாலுகாவில் அமைந்துள்ள பெத்தோரா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பிபின் கதம். 40 வயதாகும் இவர், தினசரி கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். மேலும், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பிபின் கதமின் 14 வயது மகள் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். அவரால் சாப்பிட முடியாது என்ற நிலையில், பெரும்பாலும் அவரது தாயை தான் நம்பி இருந்துள்ளார். அப்படி ஒரு வேளையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் குன்றிய பிபினின் மனைவி, படுத்த படுக்கையாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மகளுக்கு உணவு கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உருவாகி உள்ளது. தினமும் சுமார் 12 மணி நேரம் வேலை செய்யும் பிபின் கதம், தனது மகளுக்கு உணவளிப்பதற்காக வேலைக்கு நடுவே வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மகளுக்கு நேரத்திற்கு உணவளிக்கவில்லை எனில், அவர் அழ ஆரம்பித்து விடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், தனது மகளுக்கு நேரத்திற்கு உணவு கொடுக்க எதையாவது செய்ய வேண்டும் என பிபினின் மனைவியும் அறிவுறுத்தி வந்துள்ளார். அப்படி இருக்கையில், மிகவும் அதிரடியான முயற்சி ஒன்றை பிபின் கையில் எடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மகளுக்கு உணவளிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்க அவர் ஆரம்பித்துள்ளார்.
முன்னதாக, ரோபோ ஒன்றை வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளார். அப்படி உணவு கொடுக்கும் ரோபோ கிடைக்காததால், அதனை தானே வடிவமைக்கவும் பிபின் முடிவெடுத்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கூலித் தொழிலாளியான பிபின், மென்பொருள் தொடர்பான அடிப்படைகளை ஆன்லைன் மூலம் தேடி தகவலை சேகரித்துள்ளார். தினமும், 12 மணி நேர வேலைக்கு பின், எஞ்சிய நேரத்தில் ரோபோவை தயாரிப்பது தொடர்பாக கற்றுக் கொண்டும் வந்துள்ளார்.
நான்கு மாதங்கள் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து இந்த ரோபோவையும் பிபின் வடிவமைத்துள்ளார். மேலும், யாருடைய துணையும் இல்லாமல் உதவி செய்யும் இந்த ரோபோவானது தட்டில் உணவை வைத்து அந்த சிறுமிக்கு வழங்கும். அந்த சிறுமிக்கு உடலை அசைக்கவோ, கைகளை உயர்த்தவோ முடியாது என்பதால், வாய்ஸ் கமெண்ட் அடிப்படையில் உணவினை ரோபோ அளித்து வருகிறது.
தன் மகளை போல இருக்கும் மற்ற குழந்தைகளுக்கும் இது போன்ற ரோபோக்களை உருவாக்க விரும்பும் பிபின் கதம், உலகம் முழுவதும் இதனை கொண்டு செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பிபின் கதமின் கண்டுபிடிப்புக்கு கோவா ஸ்டேட் இன்னோவேஷன் கவுன்சில் பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், வணிக நோக்கை கருத்தில் கொண்டு இன்னும் ஆராயவும் நிதி உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மென்பொருள் குறித்து எந்த பின்புலமும் இல்லாத தந்தை, மகளுக்காக எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.