இலங்கை அதிபர் மாளிகைல இருந்த ரகசிய அறை.. கத்தை கத்தையா பணத்தை பார்த்து திகைச்சு போன போராட்டக்காரர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கை அதிபர் மாளிகையில் இருந்த ரகசிய அறையில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
ஆனாலும், சிக்கல் தீர்ந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
முற்றுகை
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு-வில் இருக்கும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்டனர். மிகுந்த பாதுகாப்பு கொண்ட அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் அறைகளை ஆக்கிரமித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கோடிக்கணக்கான பணம்
இந்நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளங்களில் போராட்டக்காரர்கள் நீச்சல் அடித்தும், சொகுசு அறைகளை பயன்படுத்தியும் வருகிறார்கள். மாளிகையை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் போராட்டக்காரர்கள் அங்குள்ள ரகசிய அறை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனுள் 17 மில்லியன் இலங்கை ரூபாய் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்பின்னர், இந்த தொகையை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக போராட்டக்காரார்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ரகசிய அறையில் இருந்து கோடிக்கணக்கான பணத்தினை போராட்டக்காரர்கள் எண்ணும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
