பெரும் எதிர்பார்ப்புக்கிடையே... பரபரப்பாக நடந்த காங்கிரஸ் கூட்டம்... தலைவராக யார் தேர்வு?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 10, 2019 11:13 PM
பரபரப்பான கட்டத்தில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில், அக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, கடந்த மே மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பலமுறை நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். கடந்த மே 25 அன்றே முடிவை ராகுல் காந்தி அறிவித்திருந்தாலும், இன்னும் அக்கட்சியின் அடுத்த தலைவரை அக்கட்சி தேர்வு செய்ய முடியாமல் இருந்து வந்தது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின், புது தலைவர் பதவிக்கு, முகுல் வாஸ்னிக் அல்லது மல்லிகார்ஜுன் கார்கே இவர்களில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் முதலில் வெளியாகின. இந்நிலையில், சனிக்கிழமையன்று இரவு 8 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூடியது. காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் மன்மோகன் சிங், ஏகே ஆண்டனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான தலைவர்கள் மீண்டும் ராகுல் காந்தி பெயரையே தலைவர் பதவிக்கு முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
