"ஊர் பெயரை மாத்துங்க.. எங்களுக்கே பயமா இருக்கு".. கிராம மக்கள் கோரிக்கை.. பார்லிமென்ட் வரை போன விஷயம்.. ஆத்தாடி இப்படியும் ஒரு ஊர் பெயரா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றின் பெயரை மாற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இந்த விஷயம் பார்லிமென்ட் வரை சென்றிருக்கிறது.
கிராமங்கள்
குஜராத்தில் 18,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 57 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால், இங்குள்ள கிராமங்களின் பெயர்களை கேட்டதும் பலருக்கும் திக்கென்று இருக்கும். உதாரணமாக குஜராத்தில் சிங்கபூர், ஸ்ரீநகர், ஆலு, பிண்டி, காக்ரா, மகாபாரதம், ராமாயணம், லட்டு, தோசை என்ற பெயர்களில் கிராமங்கள் இருக்கின்றன.
அதுமட்டும் அல்லாமல் குஜராத்தில் நவகம் என்ற பெயரில் 55 கிராமங்கள் உள்ளன. அதேபோல, ராம்புரா எனும் பெயரில் 39 கிராமங்களும் கோடாடா எனும் பெயரில் 35 கிராமங்களும் உள்ளன. இப்படி குஜராத்தின் கிராமங்கள் பலரையம் ஆச்சர்யப்படுத்த தவறுவதில்லை. ஆனால், குஜராத்தின் சூரத் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயர் மேற்கண்டவற்றை எல்லாம் விட விசித்திரமானது.
விசித்திர பெயர்
சூரத் மாவட்டம் மாண்ட்வி தாலுகாவில் இருக்கிறது சுடேல் கிராமம். இதற்கு பொருள் சூனியக்காரியாம். இந்த பெயரை மாற்றக்கோரி ஏற்கனவே கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இப்பெயர் தங்களுக்கு மன உளைச்சலை அளிப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து ஊர் பெயரை சந்தன்பூர் (Chandanpur) என மாற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்த கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று உள்ளூர் எம்பி பிரபு வசாவா மாவட்ட பஞ்சாயத்துக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியிருந்தார். மேலும் இந்த பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் கூட அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது என்பதால், இந்த கோரிக்கை குஜராத் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. வியாழன் அன்று, சுடேல் கிராம பஞ்சாயத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கிராமத்தின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஊர் பெயர் சந்தன்பூர் என மாற்றப்படும்.