தமிழகத்தின் கோயம்புத்தூர் - சூலூர் பகுதிகளுக்கு இடையில் உள்ள குன்னூரில் இன்று இந்திய விமானப் படையின் ஐஏஎப் எம்ஐ-17வி5 ராணுவ ஹெலிகாப்ட்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்ட்டரில் 14 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்ட்டரில் இருந்த பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வரும் தகவல்படி, முப்படைத் தளபதி பிபின் ராவத்தும் இந்த விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
பிபின் ராவத்துடன் அவரது மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்ட்டர் கூனூரில் விபத்துக்கு உள்ளாகி இருப்பது கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
இந்த விபத்து நடந்ததைத் தொடர்ந்து நான் உள்ளூர் நிர்வாகத்தை, மீட்புப் பணிக்கு அனைத்து வித ஒத்துழைப்பு தருமாறு அறிவுறுத்தியுள்ளேன். நானும் சம்பவ இடத்துக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் விமானத்தில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 80 சதவிகித தீக்காயங்களுடன் விமானி இருந்ததாகக் கூறப்படுகிறது.