இனி இணைய வசதி இல்லாமலேயே டிஜிட்டல் பேமண்ட் செய்யலாம்... RBI அசத்தல் அறிமுகம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இன்டெர்நெட் வசதி இல்லாத போன்களிலும் யூபிஐ எனும் ஆன்லைன் பணப் பரிவத்தனைகளை மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது.
Feature போன் எனப்படும் இணைய சேவை வசதி இல்லாத போன்கள் மூலமாகவும் இனி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்தான அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். மத்திய வங்கியின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இனி இணைய வசதி இல்லாத போன்களில் கூட UPI பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “நம் நாட்டில் பெரிய, சிறிய, அதிக பணப்பரிவர்த்தனைகள் UPI மூலமாகத் தான் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளை இன்னும் அதிகரிக்கவும், நிதி சந்தையில் சில்லரை வாடிக்கையாளர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் UPI அடிப்படையிலான பணப் பரிவர்த்தனைகளை இனி feature போன்களுக்கும் கொண்டு வருகிறோம்.
சில்லரை பணப் பரிவர்த்தனை விதிகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த அறிமுகம் மேற்கொள்ளப்படுகிறது. சிறிய பணப் பரிவர்த்தனைகளைக் கூட டிஜிட்டல் முறையில் சுலபம் ஆக்கவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறோம். கடந்த 2020 மார்ச் மாதம் தான் UPI பணப் பரிவர்த்தனைகளின் அதிகப்பட்ச பரிமாற்ற தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தினோம்.
தற்போது 2 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் UPI பணப் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். Feature போன்களுக்கான UPI பணப் பரிவர்த்தனை சேவைகள் வருகிற ஜனவரி 1-ம் தேதியில் அமலுக்கு வர ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.