கூகுள் ஆண்டவரே... நன்றி! ஆஸ்திரேலியா டூ இந்தியா- 24 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சகோதரர்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாவிதி இந்தக் குடும்பத்தை பிரித்து இருந்தாலும் கூகுளும் ஃபேஸ்புக்கும் பிரிந்த சகோதரர்களை சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைத்துள்ளது.

போபால், கண்ட்வா பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தின் கதை இது. ஷேரு என்ற 6 வயது சிறுவன் தனது இரண்டு சகோதரர்கள் உடன் இணைந்து பர்ஹான்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக் கொண்டிருந்தார்.
ஷேருவுக்கு 2 சகோதரர்கள். மூத்தவன் குட்டு, 2-வது சகோதரர் கல்லு என்ற சலீம். சகோதரர்கள் மூவரும் பர்ஹான்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்று முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்ப ரயில் ஏறி உள்ளனர். ரயில் கிளம்பும் போது ரயிலில் இருந்து குட்டு கீழே விழுந்துவிடுகிறான். மற்ற சகோதரர்கள் இருவரும் ரயிலிலேயே தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
சகோதரர்களின் சொந்த ஊரான கண்ட்வா ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் கல்லி ரயிலில் இருந்து கீழே இறங்கிவிட்டான். இறங்கிய பின்னர் மற்ற சகோதரர்களைத் தேடிய கல்லுவுக்கு இருவரும் கண்களில் தென்படவில்லை. ரயில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஷேரு தூங்கியபடியே அவன் பயணித்த ரயிலின் கடைசி நிறுத்தமான கொல்கத்தா ரயில் நிலையத்துக்குச் சென்றுவிட்டான்.
இந்த 3 சகோதரர்களுக்கும் மூத்தவர் ஆக ஒரு சகோதரி ஷகிலா இருக்கிறார். இவர்களின் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதால் இவர்களின் தாய் பாத்திமா மிகுந்த கஷ்டத்துடன் 4 குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்த சூழலில் தான் ரயில் பயணத்தில் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் தொலைத்துவிட்டனர். கொல்கத்தா சென்று இறங்கி தான் தொலைந்ததை உணர்ந்துள்ளான் ஷேரு. அங்கு ரயில் நிலையத்தில் இருந்த பிச்சைக்காரர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளான். அவர்கள் கட்டாயப்படுத்தி ஷேருவை பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.
கொஞ்ச நாளில் அவர்களிடம் இருந்த தப்பித்த சிறுவன் ஷேரு மீனவ குடும்பம் ஒன்றுடன் இணைந்துள்ளான். அவர்கள் சிறுவன் ஷேருவை காப்பாற்றி அநாதை குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்த்துவிட்டுள்ளனர். அநாதை இல்லத்தில் சில நாட்கள் இருந்த ஷேருவை அங்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதியர் தத்தெடுத்து ஆஸ்திரேலியாவுக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் ஷேரு, ஷாரு ப்ராலி ஆனான். அங்கேயே வளர்ந்து பிபிஏ படிப்பை நிறைவு செய்த ஷேரு தனது ஆஸ்திரேலிய பெற்றோரின் குடும்பத் தொழில் ஆன விவசாயத்தைக் கையில் எடுத்து ஒரு தொழில் முனைவோர் ஆகவும் வளர்ந்துவிட்டான். ஆனால், அவனின் மனதின் ஓரத்தில் தனது சிறு வயது இந்திய ஞாபகங்கள் இருந்து கொண்டே தான் இருந்துள்ளன.
தனக்கு ஞாபகம் இருந்த ஒரே ஊர் பெயர் அவன் தனது சகோதரர்கள் உடன் டீ விற்ற புர்ஹான்பூர் ரயில் நிலையம். ஆனால், அவனுக்கு புர்ஹான்பூர் என்ற பெயர் மனதில் ப்ர்ம்மபூர் எனப் பதிவு ஆகி இருந்துள்ளது. பின்னர் நீண்ட தேடுதல்களுக்குப் பின்னர் ஊர் பெயரை அறிந்து கூகுளில் தேடி கண்டுபிடித்துள்ளான். பின்னர் தனது சகோதரர்களின் பெயரை ஞாபகம் வைத்து அதை நீண்ட நாட்களாக ஃபேஸ்புக்கில் தேடி கண்டும் பிடித்துவிட்டான்.
தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் இருந்த தனது குடும்பத்தைக் கண்டுபிடித்துள்ளான் ஷேரு என்ற ஷாரு ப்ராலி.

மற்ற செய்திகள்
