காதலிக்கு 5.7 கோடியை அள்ளிக்கொடுத்த பேங்க் மேனேஜர்..போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தை சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவர் தனது காதலிக்கு 5.7 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியதாக அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹனுமந்தகர் பகுதியில் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஹரி ஷங்கர். இவர் ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷன் மூலமாக பெண் ஒருவருடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு 5.7 கோடி ரூபாயை ஹரி ஷங்கர் சட்டத்திற்கு புறம்பாக வழங்கியுள்ளதாக அந்த வங்கியின் மண்டல மேலாளர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், ஹரி ஷங்கரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
10 நாட்கள் விசாரணை
காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஹரி ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். முதல் தகவல் அறிக்கையில் (FIR) ஹரி ஷங்கரின் சக பணியாளர்களான உதவி கிளை மேலாளர் கௌசல்யா ஜெராய் மற்றும் கிளெர்க் முனிராஜு ஆகியோரையும் சந்தேக நபர்களாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறை அளித்த தகவல்களின்படி மே 13 மற்றும் 19 க்கு இடையில் மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை நடத்திய விசாரணையில் ஷங்கர், ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷனில் அறிமுகமான நபரிடம் பணத்தை இழந்ததாக கூறியதாக தெரிகிறது. மேலும் அவரது கூற்றுகளை போலீசார் சரிபார்த்து வருகின்றனர்.
டெபாசிட்
பெண் வாடிக்கையாளர் ஓருவர் தனது பெயரில் ரூ.1.3 கோடியை அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் தனது டெபாசிட்டில் ரூ.75 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறார். அந்த பெண் இதற்கான உரிய ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் ஆவணங்களைத் திருத்தி அவற்றைப் பயன்படுத்தி பல தவணைகள் மூலம் ரூ.5.7 கோடியை ஓவர் டிராஃப்டாக வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பல வங்கிகளின் 28 வங்கிக் கணக்குகளுக்கும், கர்நாடகாவில் உள்ள 2 கணக்குகளுக்கும் 136 பரிவர்த்தனைகளில் பணம் மாற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், விசாரணையில் ஹரி சங்கரின் தனிப்பட்ட பணமான ரூ.12.5 லட்சமும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும், பின்னர் இந்த பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹரி ஷங்கரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.