"பேரக் குழந்தை பாத்த வயசுல.." பெண் போட்ட பிளான்.. வேற லெவல் வேஷம் போட்டு பயங்கரமாக பாத்த மோசடி வேலை..
முகப்பு > செய்திகள் > இந்தியாஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
கணேஷிற்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகி விட்ட நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக அவரின் மறுமணத்திற்காக பெண்ணும் தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண் குறித்தும், அவர் ஏழை குடும்பத்தை சார்ந்தவர் என்றும், திருமண புரோக்கர் மூலம் இந்திராணிக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.
சொத்து கேட்டு தகராறு
பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் கணேஷ் மற்றும் சரண்யா என்ற பெண்ணுடன் திருமணமும் நடந்துள்ளது. ஏழை குடும்பம் என்பதால், சரண்யாவுக்கு சுமார் 25 சவரன் நகையை இந்திராணியே போட்டதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்னர், சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும், வீட்டின் பீரோ சாவி தன்னிடம் தான் இருக்க வேண்டும் எனக்கூறி, கணவர் கணேஷிடம் சரண்யா சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கணவரின் சொத்துக்களை தனது பெயரில் மாற்ற வேண்டும் என்றும் சரண்யா சண்டை போட்டுள்ளார்.
ஆதார் கார்டு மூலம் சந்தேகம்
மாமியார் இந்திராணியுடனும் சரண்யா சண்டை போட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், மனமுடைந்த கணவர் கணேஷ், தனது சொத்துக்களை எழுதி வைக்க வேறு வழி இல்லாமல் முடிவு செய்துள்ளார். இதற்காக, சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கணேஷ் கேட்டுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் அதனை கொடுக்காமல், பொய் காரணங்களை சரண்யா கூற, ஒரு கட்டத்தில் அதனை கணேஷிடம் அளித்துள்ளார். அதில், C/O என்ற இடத்தில் ரவி என இருந்துள்ளது. இதனால், கணேஷ் குடும்பத்தினருக்கு சந்தேகம் வரவே, அவர்கள் காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளனர்.
ஏமாற்று வேலைகள்
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பிறகு தான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சரண்யாவின் உண்மையான பெயர் சுகுணா என தெரிய வந்த நிலையில், ரவி என்பவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி, சுகுணாவிற்கு பேரக் குழந்தைகளும் உள்ளது. இதன் பின்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரவியை பிரிந்து, தனது தாயுடன் வாழந்து வந்துள்ளார் சுகுணா.
வருமானம் அதிகம் இல்லாத காரணத்தினால், தனது தாயுடன் சேர்ந்து ஏமாற்று வேலைகளில் சுகுணா ஈடுபட தொடங்கி உள்ளார். இதன் அடிப்படையில் தான், சுமார் 54 வயதான சுகுணா, 35 வயது போல தன்னை மேக்அப் செய்து கொண்டு கணேஷை திருமணம் செய்து, அவரது சொத்தையும் அபகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை திருமண புரோக்கர் மூலம் ஏமாற்றி திருமணம் செய்த சுகுணா, சந்தியா என்னும் பெயரில் அவருடன் 11 ஆண்டுகள் மனைவியாகி குடும்பம் நடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, முதல் கணவர் ரவி மீது வரதட்சணை கொடுமை செய்ததாக புகாரளித்து, 10 லட்சம் ரூபாய் பணத்தை சுகுணா சுருட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சுகுணா மீதான புகார்களை கேட்டு அதிர்ந்து போன போலீசார், அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பேரக் குழந்தைகள் பார்த்த வயதில், இளமையாக மாறிக் கொண்டு, பெண் ஒருவர் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.