ஆத்தாடி பயங்கரமான திருவிழாவா இருக்கும் போலயே.. 23 கிராம மக்கள் ஒன்றுசேரும் வினோத தடியடி திருவிழா.. சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர பிரதேச மாநிலத்தில் வினோத தடியடி திருவிழா இந்த ஆண்டும் நடைபெற்று இருக்கிறது. இதில் பங்கேற்றவர்களில் 50 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
திருவிழா
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் பல வினோதமான பண்டிகைகள் நடைபெறும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்த திருவிழாக்களை அந்தந்த ஊர் மக்கள், தங்களுடைய பாரம்பரியதை காக்கும் கடமையாகவே செய்து வருகின்றனர். அப்படியானவற்றுள் ஒன்றுதான் ஆந்திராவில் நடைபெறும் இந்த வினோத தடியடி திருவிழா. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி திருக்கோவில். இங்கே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
தடியடி
இந்த திருவிழாவில் அக்கம் பக்கத்தில் உள்ள 23 கிராம மக்கள் பங்கேற்பது வாடிக்கை. இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவதின் போது, மல்லேஸ்வர சுவாமி புறப்பாடு நடைபெறும். இந்த ஊர்வலம் முடிந்தபிறகு, உற்சவ மூர்த்திகளை கைப்பற்ற சுற்றியுள்ள 23 கிராம மக்களும் களத்தில் இறங்குவார்கள். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து உற்சவ மூர்த்தியை கைப்பற்றும் நோக்கில் தாங்கள் கொண்டுவந்த தடியால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வர். இறுதியில் உற்சவ மூர்த்தியை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதே காண ஏராளமான பக்தர்களும் இங்கே குவிகின்றனர்.
சோகம்
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த புதன்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. இதில் தங்களது பார்மபரியத்தின்படி தடியால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் இந்த திருவிழாவில் கலந்துகொண்ட 50 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருவிழாவில் நடத்தப்படும் தாக்குதல் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் என காவல்துறையினர் கூறி, இதனை தடுக்க முயற்சித்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் 23 கிராம மக்களுக்கும் இதுகுறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், தங்களது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுக்க கிராம மக்கள் தயாராக இல்லை. இந்நிலையில், இந்த திருவிழா குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.