'கழிவறையில் அழுகிய நிலையில் சடலம்...' 'கொரோனா பாதித்த 82 வயது பாட்டி...' எட்டு நாளுக்கு முன்ன ஆஸ்பத்திரியில இருந்து காணாம போயிருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்த 82 வயதான பாட்டி காணாமல் போய் 8 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையின் ஒரு கழிவறையில் இருந்து அழுகிய சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டம் புசாவால் பகுதியில் வசிக்கும் 82 வயதான பாட்டி கொரோனா அறிகுறிகளுடன் ஜூன் மாதம் 1ஆம் தேதி ஜல்கான் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா மையமாக திகழ்ந்து வரும் அந்த மருத்துவமனையில், வார்டு எண் 7- ல் அனுமதிக்கப்பட்ட அந்த பாட்டிக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வார்டு 7-ல் அனுமதிக்கப்பட்ட பாட்டி காணாமல் போன செய்தி மருத்துவமனை முழுக்க பரவியது மேலும் அவர் கொரோனா பாதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுமார் 8 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையின் ஒரு கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு சென்று பார்த்தால் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பாட்டியின் உடல் கழிவறையில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், "ஜூன் 2 - ம் தேதி மூதாட்டி காணாமல் போனது பற்றி உறவினர்களுக்கும் காவல் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை கண்காணிப்பாளர், "கொரோனா பாதித்த பாட்டி காணாமல் போனது பற்றி எங்களுக்கு ஜூன் 6-ம் தேதிதான் புகார் வந்தது என்றும், இந்த சம்பவம் பற்றி விரிவாக விசாரணை செய்து வருகிறோம்" எனவும் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையான பாட்டியின் இறப்பு மாநிலம் முழுவதும் பரவி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். ஜல்கான் மாவட்ட பாதுகாவலர் அமைச்சர் குலாபராவ், நடந்த இந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தையும், இந்த குற்றச் சம்பவத்துக்கு யார் காரணமோ அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஜல்கான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவினாஷ் தாக்னே, "இது மன்னிக்க முடியாத குற்றம். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.