'UK-வில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 266 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி!'.. 'இன்று இரவு முதல் விமான சேவைகள் ரத்து!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு திரும்பவும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்திலிருந்து விமானங்கள் வருவதற்கு ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்துள்ளன. இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவைகளை இன்று நள்ளிரவு (டிசம்பர் 22) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா லைன் ஏஜ் பி117 எனப்படும் இந்த புதிய வகை கொரோனா அதிக வீரியத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், லண்டனில் இருந்து நேற்றிரவு டெல்லி வந்த விமான நிலையம் வந்த 266 பயணிகளுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
பின்னர் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதேபோல் இங்கிலாந்திலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு வருட காலமாகன் மக்களின் நிம்மதியை குலைத்த நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு பிரிட்டன் தொடங்கி பல இடங்களில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் உருவாகியுள்ள இந்த உருமாற்றத் திரிபு அடைந்த புதிய ரக கொரோனா வைரஸ் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயை எதிர்கொள்வதற்கான வியூகத்தை உலக நாடுகள் வகுத்து வருகின்றன.