‘கோழிக்கோடு: விமானம் இரண்டாக பிளந்து கோர விபத்து!’.. ‘விமானி உட்பட பலியானோர் எண்ணிக்கை’!.. முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த இந்த கோர விபத்தில் விமானி உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

நீண்ட நாட்களாய் காத்திருந்து, தற்போது தங்கள் தேசத்தை நெருங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்துள்ளனர் வந்தே பாரத் திட்டத்தின் வாயிலாக துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பயணிகள். 124 பயணிகள், 10 குழந்தைகள், இரண்டு விமானிகள், 4 விமானக் குழுவினர் உள்ளிட்டோருடன் இந்த விமானம் இரவு 7.40 மணியளவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது.
மிகுந்த சிரமத்திற்கு இடையே விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது ஓடுதளத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டாக உடைந்தது விமானம் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபடுமாறு தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தீயணைப்பு படை மற்றும் 24 மணி நேர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு 9 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்திற்குச் சென்றதுடன் விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை, மழைக்கு மத்தியிலும் முழுவீச்சில் துவக்கினர்.
மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி நள்ளிரவு 12 மணியளவில் நிறைவடைந்தது. கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை, விமானி உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மற்ற செய்திகள்
