விஸ்வரூபம் எடுக்கும் சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம்.. ‘யார் அந்த மர்ம யோகி?’.. தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா பற்றிய பல அதிர்ச்சித் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
தேசிய பங்குச் சந்தையில் பல ஊழல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை நடத்தி வருகிறது. அதில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை பற்றிய பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
தேசிய பங்குச் சந்தையை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை அடையாளம் தெரியாத இமயமலை சாமியார் ‘மர்ம யோகி’ உடன் சித்ரா ராமகிருஷ்ணா தொடர்ந்து ஆலோசித்து வந்ததும், இமெயில் மூலம் அந்த மர்ம நபர் அளித்த அனைத்து ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டதும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த மர்ம நபர் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அந்த மர்ம யோகியின் ஆலோசனைப்படி, ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த ஒருவருக்கு 1.68 கோடி ரூபாய் சம்பளத்துக்கு நியமித்துள்ளார். மேலும் தொடர் ஊதிய உயர்வுகள் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த ஊதிய உயர்வை பெற்றது ஆனந்த் சுப்பிரமணியன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நபர் வாரத்துக்கு 4 நாட்கள் பணி செய்தால் போதும் என சித்ரா ராமகிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். ஆதாரம் இருக்கக்கூடாது என்பதற்காக சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியம் பயன்படுத்திய கணினிகள் குப்பையில் தூக்கி எறியபட்டு அழிக்கபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பட்டய கணக்காளர்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆனந்த் சுப்ரமணியன்தான் இந்த முறைகேட்டுக்கு காரணம் என்றும் மர்மயோகியாக செயல்பட்டது அவர்தான் என்றும் சொல்லப்படுகிறது. செபி நடத்திய விசாரணையின் இறுதியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாயும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு 2 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட 2.8 கோடி ரூபாய் போனஸ் தொகையை நிலுவையில் வைக்கும்படியும், அவருக்கு மிச்சமிருந்த விடுமுறைக்காக அளிக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் திரும்பப்பெறும்படியும் செபி உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.