பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் சைரா வாசிம்.
பாலிவுட்டில் நித்தேஷ் திவாரி இயக்கிய ‘தங்கல்’ திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்த சைரா வாசிம், காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஆவார். இவரது நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றதுடன், அவருக்கு அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் வென்றார்.
அதையடுத்து, சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சைரா வாசிம், சினிமாவை விட்டு விலகுவதாகவும், அதற்கான காரணம் குறித்தும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என் வாழ்க்கையை மாற்றிக் கூடிய முடிவை எடுத்தேன். திரைத்துறையில் அறிமுகமான எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அன்பு, ஆடஹ்ரவு, புகழ் என அனைத்தும் கிடைத்தது. ஆனால் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இந்த வேலை எனக்கு ஒத்துவரவில்லை’.
‘இந்த வேலை மூலம் எனது இறை நம்பிக்கைக்கு இடையூராக இருந்து வந்தது. எனது மதத்திற்கும் எனக்குமான உறவை இந்த துறை கெடுத்துவிடுமோ என்ற அச்சம் எனக்குள் வந்துவிட்டது. எனினும், அதனை கடந்து எனது ஆத்மாவிற்கும்-மனதிற்கும் இடையிலான போராட்டத்தில் தோல்வியையே சந்தித்தேன். இதன் காரணமாகவே இனி சினிமாத்துறையில் என்னால் தொடர முடியாது’ என்பதை தனது இன்ஸ்டா பதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, ஃபர்ஹான் அக்தர் ஆகியோர் நடித்துள்ள ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ திரைப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சைரா வாசிம் நடித்துள்ளார்.