ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் ஜீவா, ஜிப்ஸி திரைப்படம் தன்னை புதிய மனிதனாக மாற்றிவிட்டது என்றார்
இதுகுறித்து அவர் பேசியதாவது, 'என்னுடைய வீட்டிலும் நான் ஒரு ஜிப்ஸி மாதிரி தான் சுற்றிக்கொண்டு இருப்பேன். எனது வீட்டிலும் வித்தியாசமான கலாச்சார முறை உள்ளது. எனது தந்தை ஒரு ராஜஸ்தானி. தாய் தமிழர். மனைவி பஞ்சாபி. இவர்களுக்கு இடையே தான் நான் வாழ்ந்து கொண்டிருகிறேன்.
ஜாதி, மத, மொழிகளை கடந்த படம் ஜிப்ஸி. இந்த படத்தில் நான் ஒரு சாதாரண மனிதன். இந்தியா முழுவதும் மக்கள் ஒன்று தான். எல்லோருக்கும் ஒரே குணம் தான். இந்த படத்தில் நடித்து முடித்தப் பிறகு நான் வேறு ஒரு மனிதனாக மாறி இருக்கிறேன். சமத்துவம் என்றால் என்ன என்பதை அனுபவ ரீதியாக கற்றிருக்கிறேன்
ராஜுமுருகன் ஒரு சிறந்த எழுத்தாளர். அவருடைய எழுத்துக்கு எனது நன்றி. சினிமாவுக்கு நிறைய எழுத்தாளர்கள் தான் வர வேண்டும். ஒரு நடிகன் நன்றாக நடிக்கிறான் என்றால் அதற்கு இயக்குனரின் எழுத்து தான் முக்கிய காரணம்.
இந்த படத்தில் நிறைய உணர்வுகள் இருக்கிறது. ஜிப்ஸியில் நடித்ததில், இந்தியாவில் நாம் வாழ்வது எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் என்பதை உணர்த்தியது. இது எனக்கு முக்கியமான படம். இந்த படத்தில் என்னுடன் இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த ஹீரோயின் நடாஷாவை பாராட்டியே ஆகவேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக நிறைய சினிமா விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரே மாதிரியாக பேசி போரடித்துவிட்டது. சமூக போராளி பந்த் சிங்கின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் இந்த விழாவில் வெளியிடப்பட்டது மகிழ்ச்சியான விஷயம். சினிமா விழாக்கள் இப்படி தான் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதுபோன்ற சமூக போராளிகளை நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்', என நடிகர் ஜீவா கூறினார்.
“ஜிப்ஸி”என்னை புதிய மனிதனாக மாற்றிவிட்டது - ஜீவா வீடியோ