"கண்ணின் மணி... கண்ணின் மணி நிஜம் கேளம்மா.." - ராதிகாவின் ‘சித்தி 2’ விரைவில்..?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 05, 2019 10:32 AM
ராதிகா சரத்குமாரின் ராடான் டிவி தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான மெகா தொடர் ‘சித்தி’. தற்போது இரண்டாம் பாகமாக இந்த சீரியல் உருவாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1999ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சன் டியில், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான ‘சித்தி’ சீரியலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை ராதிகாவை சித்தியாகவே நேசித்தனர்.
இசையமைப்பாளர் தினாவின் இசையில் ‘கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா...’ என நித்யஸ்ரீ பாடிய சித்தி சீரியலின் டைட்டில் பாடல் மிகவும் பிரபலமானது. இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் இயக்கிய இந்த சீரியல் ராதிகாவின் சின்னத்திரை பயணத்தில் ஓர் மைல் கல் என்றே கூற வேண்டும்.
அதைத் தொடர்ந்து ராதிகாவிற்கு சன் டிவி ஒதுக்கிய 9.30 மணி ஸ்லாட்டில் ‘செல்லமே’, ‘அண்ணாமலை’, ‘அரசி’, ‘செல்வி’, ‘வாணி ராணி’ அனைத்து சீரியல்களும் ஹிட்டாகின. இந்நிலையில், மெகா ஹிட்டான மெகா தொடர் ‘சித்தி’-யின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராதிகா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கான கதை விவாதமும், நடிகர், நடிகைகள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தியை ஓலவே சித்தி 2-விலும், வெள்ளித்திரை பிரபலங்கள் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. விரைவில் சன் டிவியில் ‘சித்தி 2’ சீரியல் ஒளிபரப்பாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.