தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார்.

இந்தத் தேர்தலில் நாசர் தலமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விஷால் அணி சார்பாக தேர்தல் பிரசாரத்துக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடு செய்ததாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “23.6.2019 -ல் நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது மாதிரி வேடிக்கையாக இருக்கிறது.
விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது, முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா? இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார்.
இப்படியே நீங்கள் பிரவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒரு போதும் உதவாது. இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்” என்று ராதிகா சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
#NadigarSangam , stop this disgraceful behaviour. pic.twitter.com/S1xvRqBknX
— Radikaa Sarathkumar (@realradikaa) June 14, 2019