‘அப்படியே பிரதமருக்கு ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணிடலாமே..!’- பிரியா பவானி ஷங்கர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது பெயரில் போலியாக இயங்கி வரும் ட்விட்டர் அக்கவுண்ட்டின் பதிவுகளுக்கு நடிகை பிரியா பவானி ஷங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

Priya Bhavani Shankar replies to fake twitter accounts on Election results

செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரையில் பிரபலமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக  பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பிரியா பவானி ஷங்கரின் பெயரை கெடுக்கும் விதமாக போலி அக்கவுண்ட்கள் ட்விட்டரில் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போலி அக்கவுண்ட்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். அவரது ட்வீட்டில், ‘உங்களுடைய ஆர்வமும், பொறுப்பும் எனக்கு புரிகிறது. ஆனாலும், மணிக்கு ஒருமுறை ஏதேனும் பதிவிட்டு என்னை சங்கடப்படுத்தாதீர்கள்’ என ட்வீட் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று (மே.23) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, பெரும்பாலான மாநிலங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவிருக்கிறார். இந்நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கரின் போலி ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து, ‘வாழ்த்துக்கள் நமது நிரந்தர பிரதமர் நரேந்திர மோடி’ என்ற ட்வீட் பகிரப்பட்டிருந்தது.

இதனை கண்டிக்கும் விதமாக நடிகை பிரியா பவானி ஷங்கர், ‘அப்படியே நரேந்திர மோடிக்கும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணிட்டா பிரதமர் மாதிரியே ட்வீட் போட்டர்லாமே! போலி அக்கவுண்ட்க்கு எதுக்கு டா இவ்ளோ எமோஷன்! கடுப்பாகுது உன்னோட கருத்த மற்றவங்க மேல திணிக்கறது’ என்று பதிவிட்டுள்ளார்.