மான்ஸ்டர் திரைப்படத்தை குடும்பமாக மக்கள் வந்து பார்ப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் நடித்துள்ள படம் மான்ஸ்டர். இந்த படத்தில் எலி ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. கடந்த வாரம் ரிலீசான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை விரும்பி பார்க்கின்றனர்.
இந்த வெற்றியால் எஸ்.ஜே.சூர்யா மகிழ்ச்சியில் உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதல்முறையாக தனது படத்தை குடும்பங்களுடன் மக்கள் வந்து பார்ப்பதாகவும், இதனால் முன்பு நாம் தவறு செய்துவிட்டோமே' என்ற குற்ற உணர்ச்சி ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் பேசியதாவது, 'மான்ஸ்டர் படம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல்முறையாக தனது படத்தை குடும்பங்களுடன் மக்கள் வந்து பார்க்கின்றனர். இதனால் முன்பு நாம் தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.
பிள்ளையாரின் வாகனம் எலி. அந்த எலியால் ஒரு புதிய பயணம் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை நான் பாலைவன மனிதனை போலத்தான் வாழ்ந்து வருகிறேன். முடிந்த வரை தண்ணீரை நிரப்பிக்கொண்டு இப்படியே நடந்துகொண்டிருக்கிறேன். இப்போது தான் கொஞ்சம் பசுமையான சாலைகள் தெரிய தொடங்கி இருக்கிறது.
நடிகனாக வேண்டும் என்பது தான் எனது ஒரே விருப்பம். அதற்காக தான் இயக்குனர், தயாரிப்பாளர் என பல வேலைகளை செய்தேன். எனது வாழ்க்கையில் நான் நிறைய சறுக்கல்களை சந்தித்திருக்கிறேன். விழுந்து விழுந்து தான் எழுந்திருக்கிறேன். நடிப்பின் மூலம் வரும் பணம், புகழ்தான் எனக்கு பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.
அமிதாப் பச்சனுடன் நான் இணைந்து நடிக்கும் உயர்ந்த மனிதன் படம் விரைவில் முடிவடையும். அதில் உள்ள பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளேன். நெஞ்சம் மறப்பதில்லை, இரவா நேரம் உள்பட நான் நடித்துள்ள நிறைய நல்ல படங்கள் வெளிவர முடியாமல் பொந்தில் மாட்டியிருக்கிறது. மான்ஸ்டர் அதை வெளியில் எடுக்கும் என நம்புகிறேன்.
நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இப்போதைக்கு நடிப்பில்தான் கவனம் செலுத்துகிறேன். இடையில் எப்படியாவது ஒரு படம் இயக்குவேன்', என எஸ்.ஜே.சூர்யா கூறினார்
"இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது" - மான்ஸ்டர் எஸ்.ஜே.சூர்யா எதை குறிப்பிடுகிறார் ? வீடியோ