ஷார்ட் ஃபிலிம் முதல் சூப்பர்ஸ்டார் வரை..! கார்த்திக்கின் க்ளாசிக் எப்படி மேஜிக் செய்கிறது.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர் என கொண்டாடப்படும் கார்த்திக் சுப்புராஜுக்கு பிறந்தநாள். 8 வருடங்கள்.. 5 படங்கள். இதற்குள் சூப்பர்ஸ்டாரின் இயக்குநர் என்ற அந்தஸ்தை இளம் வயதிலேயே அடைந்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இவர் திரையில் காட்டும் மேஜிக், ரசிகர்களை மயக்குவதில் தவறியதில்லை. அப்படியான கார்த்திக்கின் திரைப்பயணம் எப்படி இருந்தது.?

கார்த்திக் சுப்புராஜின் எப்படி சாதித்தார் | karthik subburaj's inspirational cinema journey from short films

2010-க்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர தொடங்கியது. அது சினிமாவிலும் பிரதிபலித்தது. ஒரு சிறிய கேமராவை கொண்டு, நாம் நினைத்ததை படமாக்க முடியும் என பலர் அதில் இறங்கினார்கள். அப்படிதான் மிகப்பெரிய அசுர பாய்ச்சலை ஷார்ட் ஃபிலிம்ஸ் செய்தது. அப்படி ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுத்து இன்று இயக்குநர்கள் ஆனவர்கள் பலர். நலன் குமாரசாமி, பாலாஜி மோகன், ராம்குமார் என பல இயக்குநர்களுக்கு ஷார்ட் ஃபிலிம் தான் முதல் முகவரியானது. அவர்களுள் ஒருவராக வந்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் டிவியில் நாளைய இயக்குநர் போட்டியில், தனது குறும்படங்களால் கவனத்தை ஈர்த்தார் கார்த்திக். அந்த நிகழ்ச்சி அவருக்கான கதவுகளை திறந்துவிட, அடுத்தக்கட்டமாக சிறிய பட்ஜட்டில் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என முடிவு செய்தார். அதுதான் பீட்சா.

மிக குறைந்த கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள், ஒரே வீட்டில் லோகேஷன் என குறைந்த பட்ஜட் படங்களுக்கே உரிய அனைத்தும் பீட்சாவுக்கு இருந்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி, அந்த படம் பேசப்பட்டதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லிய விதம். ஒரு பேய் படத்தை மிக ஸ்டைலிஷாக அவர் டீல் செய்த விதம்தான், அவரை கவனிக்க வைத்தது. மேலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக கொண்டாடப்படும் விஜய் சேதுபதியிடம் இருந்து, மிக எதார்த்தமான நடிப்பை வாங்கியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படமும் வெளியாகி வெற்றியடைய, விஜய் சேதுபதி அடித்த டார்ச்லைட் வெளிச்சத்தை தன் மீது விழச் செய்தார். எப்பொழுதுமே இயக்குநர்களுக்கு முதல் படம் என்பது பெரிய பரிட்சை கிடையாது. அவர்களின் இரண்டாவது படம்தான் பெரிய சவால்கள் நிறைந்தது. காரணம் இந்த முறை இன்னும் அதிகமாக தங்களை நிருபிக்க வேண்டும். அதற்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த தரமான ஐட்டம்தான் ஜிகர்தண்டா.

ரவுடியின் கதையை படமாக்க நினைக்கும் இளம் இயக்குநர். ஒருகட்டத்தில் அந்த ரவுடியை வைத்தே படம் செய்ய வேண்டும் என்ற நிலைமை. இதை மட்டும் கருவாக கொண்டு, அதற்குள் ஒரு பக்கா கேங்ஸ்டர் கதையை செய்ததுதான் கார்த்திக் சுப்புராஜின் ஜாலம். பாபி சிம்ஹாவை வைத்து இவர் செய்த காட்சிகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் ஆல் டைம் மிரட்டல் சீன்ஸ். 'இந்த கேரக்டரை நான் பண்ணியிருப்பேனே' என சூப்பர்ஸ்டாரை சொல்ல வைத்ததோடு இல்லாமல், அசால்ட் சேதுவுக்காக தேசிய விருதையும் கைபற்றினார் கார்த்திக். கார்த்திக் சுப்புராஜின் ஸ்பெஷலே அவர் காட்சிகளை வித்தியாசமாக சொல்லும் முறைதான். அப்படிதான் ஜிகர்தண்டாவில், அசால்ட் சேதுவின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு நாடக காட்சி போல, அது வருமாறு அவர் வடிமைத்திருப்பார். இப்படி ஜிகர்தண்டாவில் தனது ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டை ஒவ்வொரு காட்சியிலும் நிருபித்தார் கார்த்திக் சுப்புராஜ்.

தன்னால் மாஸான, இளைஞர்களுக்கு பிடித்த படங்கள் மட்டுமல்ல, மிக ஆழமான கதையம்சத்துடன் கூடிய படங்களை கொடுக்க முடியும் என கார்த்திக் சொல்லியது இறைவி படத்தின் மூலம். மூன்று பெண்களை மையப்படுத்திய கதை. அதற்குள் மூன்று ஆண்களின் கதை. இதன் வழியே, சமூகத்தில் நிலவும் ஆண் ஆதிக்கமும், பெண் விடுதலையும் என்ன என்பதை அழகாக பேசியிருப்பார். மழையை ரசிக்கும் பெண்களையும், அதில் இறங்கி ஆட தயங்க வைக்கும் சமூகத்தின் மோசங்களையும் கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு மேலும் வலுசேர்த்தது எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்டோரின் நடிப்பு. இன்று வரையிலும் இறைவி படம் சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அந்த படம் வெற்றியா தோல்வியா என்பதை எல்லாம் விட, ஒரு இயக்குநராக பெண் விடுதலையின் மீது விவாதத்தை ஏற்படுத்தியதில் கார்த்திக் சுப்புராஜ் வென்றுவிட்டார். மூன்று படங்கள் செய்தாச்சு, அடுத்து இன்னும் பெரிய படம் என்று போகாமல், தனக்கு பிடித்ததை செய்ய நினைத்தார் கார்த்திக் சுப்புராஜ். அதுதான் மெர்குரி திரைப்படம். வசனம் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தால் அது உருவானது. இதற்கு பிறகு தான் கார்த்திக் சுப்புராஜ் வாழ்க்கையில் ஒரு தரமான சிறப்பான சம்பவம் நடந்தது. அதுதான் ரஜினிகாந்த் நடித்த பேட்ட.

ஆரம்பக்காலம் முதலே ரஜினியின் தீவிர ரசிகர் என சொல்லிவரும் கார்த்திக் சுப்புராஜுக்கு அவரது தலைவரையே  இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாரா. ஒரு ரசிகனுக்கான அத்தனை ஃபேன் மொமன்ட்ஸ்களையும் குவித்து பேட்ட படத்தை உருவாக்கினார். குறிப்பாக முதல் பாதியில் அவர் காட்டிய ரஜினி, தனது முந்தைய படங்களைவிட செம ஃப்ரெஷாக இருப்பார். ஜில்லான க்ளைமேட், கூலான காஸ்ட்யூம்ஸ் என ரஜினி எனும் மாஸ் ஹீரோவை வைத்து, கார்த்திக் சுப்புராஜ் செட்டைகள் செய்தார். அதே போல படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில், ரஜினிக்கே உரிய மாஸ் எலமன்ட்ஸை தனது ஸ்டைலில் கொடுத்து விருந்து வைத்தார். ரஜினி ரசிகர்களுக்கு பேட்ட படத்தை செம ஸ்பெஷலாக இருக்கும்படி படத்தை எடுத்ததிலேயே, தான் ஒரு தலைவரின் வெறித்தனமான ஃபேன் என்பதை சொல்லிவிட்டார் கார்த்திக். ஹிந்தியில் இருந்து நவாசுத்தின் சித்திக், வில்லனாக விஜய் சேதுபதி என தனது கலக்கல் கேங்க்ஸ்டர் விஷயங்களை இணைக்க கார்த்திக் தவறவில்லை.

இதோ இப்போது தனுஷுடன் ஜகமே தந்திரம். ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. லண்டன், மதுரை என இரு வேறு கதை களங்கள்.. கேங்க்ஸ்டராக தனுஷ் என தனது அடுத்த மாஸ்டர் பீஸை ரெடி செய்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் மிக ஸ்டைலிஷான ஃபிலிம் மேக்கிங்கையும், அதற்குள் நமது ஊருக்கேற்ற கதையை கலந்து கட்டி ஜில்லாக ஜிகர்தண்டா கொடுக்கும் கார்த்திக் சுப்புராஜை, தமிழ்நாட்டின் Quentin Tarantino என ரசிகர்கள் புகழ்வதில் மிகையில்லை. இப்பொழுதும் நல்ல திறமை இருந்தால் போதும், 10 நிமிட குறும்படம், உங்களை சூப்பர்ஸ்டார் வரை கொண்டு செல்லும் என ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷ்னாக இருந்து வரும் கார்த்திக் சுப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Entertainment sub editor