#18YearsofDhanush : 'யாருப்பா ஹீரோன்னு கேட்டாங்க... ஆனா இப்போ...!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பெயராகியிருக்கிறது. உலக சினிமாவிலும் கூட இந்த பெயர் கூடிய விரையில் ஒரு தவிர்க்க முடியாத பெயராக மாறப்போகிறது என்பதில் எல்ளவும் ஐயமில்லை.  இந்த உடம்புக்குள்ள இத்தனை கேரக்டர்ஸா என நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு, வெரைட்டி காட்டி வெளுத்து வாங்கும் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 18 ஆண்டுகள் ஆகிறது. துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்த தனுஷின் பயணம் இன்று பட்டாஸாய் வெடித்து கொண்டிருக்கிறது. இந்த நாளில் தனுஷ் எனும் அசுரனின் கதையை நினைவு கூர்வோம் வாருங்கள்.

18 வருட தனுஷின் சினிமா வாழ்க்கை | Celeberating Actor Dhanush on Completing 18 Years of Dhanushism in Cinema

சினிமாவை நேசித்து, அதன் மீது தீரா காதலோடு வந்தவர்கள் ஏராளம். ஆனால் தனுஷுக்கு அப்படியான எந்த ஆசையும் இருக்கவில்லை. நீச்சல் கூட தெரியாமல் கடலில் குதித்தது போல் தான் தனுஷுக்கு துள்ளுவதோ இளமை. செல்வராகவன் எனும் ஜீனியஸ் தனது எழுத்துக்களை தனுஷின் மீது ஏற்றி, அதை வெள்ளித்திரையில் களமாட வைத்தார். துள்ளுவதோ இளமையில் ரிகர்சல் பார்த்தாயிற்று, அடுத்த செல்வா, தனுஷ் இருவருமே பக்காவாக பாய்ந்தது காதல் கொண்டேன் படத்தில்தான். இப்போது தான் சினிமாவே தெரிகிறது என நினைக்கையில், இரண்டாவது படத்தில் சைக்கோ கதாபாத்திரம். முதல் பாதியில் பார்த்தாலே பாவம் என சொல்ல வைக்க வேண்டும், அதே நேரத்தில் அடுத்த பாதியில் அஞ்சி நடுங்க வைக்கும் சைக்கோவாகவும் இருக்க வேண்டும், இதற்கிடையில் அப்பாவியாக, உணர்வுகளின் புரிதல் இல்லாமல் தவிப்பவனாக, குரூரம் கொண்ட கொலைக்காரனாக, இரண்டாவது படத்திலேயே செல்வா தனுஷுக்கு ஹெவி வொர்க் கொடுத்துவிட்டார். ஆனால், அந்த வயதில் தனுஷ் வினோத் கதாபாத்திரத்தை கொண்டு சென்ற விதமே, ஒரு நடிகன் உதயமாகிறான் என்பதை சொல்லிவிட்டது. ஒருபக்கம் நடிப்புக்கு பாராட்டு, இன்னொரு பக்கம் படமும் ப்ளாக்பஸ்டர் என தனுஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்து லெகுலர் கமர்ஷியலில் இறங்கி திருடா திருடி. தனுஷ் முதல் முறையாக காமெடி, லவ், டான்ஸ் என கலக்கியதும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. மன்மத ராசாவாக அவர் தமிழ் நெஞ்சங்களில் குடியேறினார். இதை தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுல்லான், ட்ரீம்ஸ், தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்கள் நடித்துவிட்டு, பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் மூலம் தனுஷ் சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க தொடங்கியிருந்த நேரத்தில் கிடைத்தது புதுப்பேட்டை.  அதற்குள் செல்வராகவன் 7ஜி எடுத்து ஹிட் கொடுத்துவிட்டார். மீண்டும் இருவரும் இணைகிறார்கள், யுவன் இசை என எதிர்ப்பார்ப்பு எகிறியது. புதுப்பேட்டையில் கொக்கி குமார் எனும் ரவுடி மட்டும் வளரவில்லை, தனுஷ் எனும் க்ளாசிக் நடிகனும் சேர்ந்தே வளர்ந்தார். ஒரு டீன் ஏஜ் பையனிலிருந்து 30 வயதை கடந்த ரவுடி அரசியல்வாதி. அப்போது தனுஷுக்கு வயது 24 தான். புதுப்பேட்டையில் தனுஷின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அந்தளவுக்கு அதில் வரும் வசனங்களை அப்படியே யதார்த்தமாக பேசியிருப்பார். ஆனால் புதுப்பேட்டையில் பல காட்சிகளில் தனுஷ் பேசாமல், வெறும் பார்வையால் மட்டுமே நடித்திருப்பார். அந்த ஒவ்வொரு பார்வையும், படத்தில் கொக்கி குமாரின் வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்திருக்கும். அன்புவை போட்டு விட்டு தலைவர் வீட்டு வாசலில் வந்து நிற்பது, பணப்பொட்டியுடன் உள்ளே சென்று உட்கார தயங்கி நெளிவது, பதவி கிடைத்தப்பின் கிடைக்கும் மரியாதையை கண்டு ஆச்சர்யம், எம்.எல்.ஏ ஆக போகிறோம் என போஸ்டரை கண்டு கண்களில் வெளிப்படும் ஆசை என மனுஷன் உலக லெவல் ஆக்டிங்கை அசால்டாக கொடுத்திருப்பார். மகனை குப்பை தோட்டியில் போட்டுவிட்டு, தனுஷ் பேசும் காட்சி தமிழ் சினிமாவில் எப்போதும் நினைவில் வைத்து கொண்டாடப்படும் க்ளாசிக்.

தனுஷ் கெரியரில் செல்வராகவனை போலவே வெற்றிமாறனுக்கும் தனி இடம் உண்டு. இருவருமே தனுஷிடம் இருந்து பெஸ்டை வாங்குவதில் தேந்தவர்கள். பொல்லாதவன் சில முறை ஆரம்பத்தில் முடங்கினாலும், தனுஷ் வெற்றிமாறனின் பக்கம் உறுதியாக நின்றார். தனுஷை எல்லோரும் பக்கத்து வீட்டு பையனாக கொண்டாடியது பொல்லாதவனில்தான். ஒரு ஹீரோவுக்கு சொல்லப்படுகிற உடல்வாகு இன்றி, மிடில் க்ளாஸ் பையனாக, பைக்கை விரும்பும் இளைஞனாக தனுஷ் ஒவ்வொரு யூத்துக்கும் ஃபேவரைட் ஆனார். பொல்லாதவன் கட்டிங்கும், பல்சர் பைக்கும்தான் அப்போதைய இளசுகளின் இன்ஸ்டன்ட் கணவாக இருந்தது. பொல்லாதவனில் டார்க் மாஸ் காட்டிவிட்டு, யாரடி நீ மோகினியில் ஃபீல் குட் ஆட்டம் ஆடினார் தனுஷ். காதல் கொண்டேன் போல, முதல் பாதிக்கும் அடுத்த பாதிக்கும் அப்படியே மாறுபட்டிருப்பார் இதில். புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, அம்பிகாபதி, வடச்சென்னை போல தனுஷ் நடித்த அநேக படங்களில் அவரின் கதாபாத்திரம் டீன் ஏஜ்ஜில் இருந்து குறிப்பிட்ட கால மாற்றத்தை சந்திப்பது போல அமைந்து இருக்கும். அந்த கால மாற்றத்தில் ஒரு கதாபாத்திரம் எப்படி மாறும் என்பதை மிக இலாவகமாக காட்டுவதில் தனுஷ் ஒரு ஆழமான நடிகன்.

படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன் என ஆல் சென்டர் ரசிகர்களுக்காக ஒரு பக்கம் நடித்தாலும், தன் நடிப்பு பசிக்கு தீணி போட தனுஷ் தவறுவதில்லை. தனுஷின் நடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த படம் ஆடுகளம். ஆடுகளும் கருப்பு கதாபாத்திரம் தனுஷுக்கான டெய்லர் மேட் ரோல். உள் பனியனும் லுங்கியும் என ஒல்லியான தேகத்துடன் கில்லியாக அலப்பறை கொடுத்து கலக்கியிருப்பார் தனுஷ். அதே அளவுக்கு செகன்ட் ஹாஃப்பில் செம எமோஷன் காட்டி அசத்தினார். அடுத்தது மயக்கம் என்ன., பொதுவாகவே செல்வராகவனின் படங்களின் ஹீரோக்கள் அவரை போலவே இருப்பார்கள், செல்வாவே திரையில் நடிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்திவிடுவார் அவர். ஆனால் மயக்கம் என்ன படத்தில், முழுக்க முழுக்க தனுஷ் நிறைந்திருப்பார். அத்தனை உணர்வுகள் நிறைந்த கார்த்திக் சுவாமிநாதன் கதாபாத்திரம், தனுஷின் நடிப்பில் இன்னொரு மகுடமே. இப்படி நடிப்பு ட்ராக் ஒருபக்கம் ஓட, மாஸ் ஏரியாவிலும் புகுந்து எல்லோரின் மனதிலும் ஃபேவரைட் இடம் பிடிப்பதையும் தனுஷ் விட்டு வைக்கவில்லை. 3, வேலையில்லா பட்டதாரி இந்த இரண்டு படங்களுமே தனுஷுக்கு ஸ்பெஷல் படங்கள்தான். குட்டீஸ் முதல் அம்மாக்களின் ஜெனரேஷன் வரை, தனுஷ் ஏல் ஏரியாவிலும் ஸ்கோர் செய்தார். கூடவே கொலவெறி பாடல் உலக லெவல் ஹிட் அடித்தது, இன்னும் அவரை உயரத்திற்கு கொண்டு சென்றது.

அதற்குள் ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், தமிழில் அடுத்தடுத்து படங்கள் என தனுஷ் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தார். புதுப்பேட்டையில் செல்வராகவன் ஒரு வசனம் எழுதியிருப்பார், ''இந்த முக சாயலு, எங்கயோ போக போகுது''. ஆம், அதுதான் நிஜத்திலும் நடந்தது. தனுஷின் நடிப்பு அயல்நாடுகளிலும் ரீச் ஆனது. இதையடுத்து ஜர்னி ஆஃப் ஃபகிர் படத்தின் மூலம் சர்வதேச அரங்கிலும் தனது கால்தடத்தை பதித்தார் நம் ரவுடி பேபி. என்னதான் இருந்தாலும் கனவு படத்தை விட முடியுமா.?, தனுஷ், வெற்றிமாறன் இருவருக்குமே வடச்சென்னை மிகப்பெரிய கனவு. அதை சாத்தியமாக்கியத்தில் பெரும் உழைப்பு இருக்கிறது. அடாவடியான ஃபன்க் இளைஞன், கொஞ்சி விளையாடும் லவ்வர் பாய், ஜெயிலுக்குள் கொலைவெறியுடன் இறங்கும் சாமானியன், தாதாக்களை எதிர்க்கும் ஊருக்கானவன் என தனுஷ் ஒரே படத்தில் ஒரு ஏரியாவின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தினார். ஸ்ட்ரைக்கர் பிடிப்பதில் தொடங்கி ஸ்டீல் சாமான் பிடிப்பது வரை, வடச்செனையில் தனுஷின் நடிப்பு நூறு சதவீத நேர்த்தி. வடச்சென்னையை முடித்துவிட்டு,  நாட்டி தாதாவாக, அதே நேரத்தில் கொஞ்சம் பிசகினாலும் வில்லன் தன்மை கொடுத்தவிட கூடிய மாரி-2 படத்தில் நடிப்பதெல்லாம் தனுஷுக்கே உரியது. அப்படி தனுஷ் செய்த சமீபத்திய சம்பவம்தான் அசுரன். இந்த முறை இன்னும் அதிக முனைப்புடன் 50 வயதை நெருங்கிய சிவசாமி கதாபாத்திரம். எப்போதும் போல தனுஷ் தனக்கு விட்டுக்கொண்ட சவாலை அவரே அடித்து நொறுக்கினார். தனுஷ் நடிப்பின் அசுரன் என அவரின் நடிப்பை பாராட்டியதோடு, படத்தை சூப்பர் ஹிட் அடிக்கவும் செய்தார்கள் ரசிகர்கள். க்ளைமாக்ஸில் தனுஷ் தன் மகனிடம் சொல்லும் வார்த்தைகள், இன்னும் ஆண்டுகள் கடந்தும் பேசப்பட்டு கொண்டே இருக்கும். அப்படியே பட்டாஸாக சில் ப்ரோ செய்து லைக்ஸ் அள்ளுவதிலும் தனுஷுக்கு ஒரு ஜாலிதான்.

இதோ அடுத்து கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், கார்த்திக் நரேன், ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் படங்கள், ஹிந்தியில் அட்ராங்கி ரே என பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் தனுஷ். இந்த பதினெட்டு வருடங்களில் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களை நமக்கு கொடுத்திருக்கிறார் தனுஷ். வினோத், கொக்கி குமார், பிரபு, கருப்பு, கார்த்திக், ராம், குந்தன், மாரி, ரகுவரன், அன்பு, சிவசாமி என தனுஷ், ஒவ்வொரு கேரக்டரையும் தனக்குள் புகுத்தி, நமக்குள் கடத்தியிருக்கிறார். தனுஷ் சொல்லியிருப்பார், 'ஒரு முறை ஷூட்டிங்கின் போது அவரிடமே ஒருவர், யாருப்பா ஹீரோ என கேட்டாராம்'. அப்படி ஆரம்பித்த பயணம், இப்போது யாருப்பா ஹீரோன்னு கேட்டவர்கள் எல்லாம், என்ன நடிப்புடா சாமி என மெய் சிலிர்த்து போகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது 18 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால், தனுஷ் இத்தோட நின்றுவிட போவதில்லை. அவர் உலகம் முழுக்க கொண்டாடப்பட வேண்டியவர். இந்திய சினிமாவின் முகமாக அறியப்பட வேண்டியவர். அந்த நாளில் உலக அரங்கில் இவரின் நடிப்பு மெய் சிலிர்ந்து பேசப்படும். அப்படியான தனுஷை எப்பொழுதுமே தமிழ் சினிமாவின் பெருமை என சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

Entertainment sub editor