‘அவர் ஒரு நகைச்சுவை ஞானி’ - கிரேஸி மோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட வசனகர்த்தாவும் நாடக மற்றும் திரைப்பட நடிகருமான கிரேஸி மோகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். இவர் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

Kamal Haasan Emotional Statement on Crazy Mohan

இவரது மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது.

கிரேசி என்பது அவருக்கு பொருந்ததாத பட்டம். அவர் 'நகைச்சுவை ஞானி'. அவரது திறமைகளை குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்பது உண்மை.

பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன் மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.

அந்த நல்ல நட்பின் அடையாளமாக இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியா விடை கொடுத்தோம்.  நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா?

மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும் அந்த வாழ்விற்கு துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது. போதாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.