உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிருப்பதாக வெளியான தகவலை நடிகர் ராம்கி மறுத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், 3வது சீசன் வரும் ஜூன்.23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், பிரபலங்கள் பலரது பெயர்கள் சமூக வலைதளங்களில் உலாவிய நிலையில், 80-90களின் ஹீரோவான ராம்கி பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து கேட்க ராம்கியை தொடர்புக் கொண்டபோது, தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், போட்டியாளர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.